சனிப்பெயர்ச்சி விழாவிற்காக புணரமைக்கப்படுகிறது நளத்தீர்த்தம்!
காரைக்கால் : சனிப்பெயர்ச்சி விழாவிற்காக திருநள்ளார் நளன் குளம் புனரமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. குளக்கரை படிகட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது. காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற சனிஸ்வர பகவான் கோவில் உள்ளது. இங்கு இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சி விழா பிரசித்தி பெற்றது. கடந்த 2009ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில், 30 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் ஆன்மிக தளமாக திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் விளங்குகிறது. இக்கோவிலை திருப்பதி கோவிலுக்கு நிகராக மாற்ற, அரசு கோவில் நகர திட்டத்தை கொண்டு வந்தது. இதில் பக்தர்களுக்கு தங்கும் விடுதிகள், சாலை, குடிநீர் வசதி, கழிப்பறைகள், பஸ் நிறுத்தம், கோவில் புனரமைப்பு, நளன் குளம் புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக நளன் குளம் புனரமைக்கும் பணி ஹட்கோ நிதியுதவியுடன் 6.65 கோடி ரூபாய் செலவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியது.
நளன் குளத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றி, குளத்தை ஆழப்படுத்தி சுற்றி படித்துறைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. படிக்கட்டுகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதற்குள் நளன் குளத்தை தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குளத்தை சுற்றி வணிக வளாகம், கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் கட்டும் பணி துவக்கப்படவில்லை. சனிப்பெயர்ச்சி விழாவிற்குள் பக்தர்கள் வசிக்காக கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகளையும் விரைவாக கட்டி முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.