திருப்பூர் சாய்பாபா சன்னிதானம் 7ம் ஆண்டு துவக்க விழா
திருப்பூர்: திருப்பூரில், ஷீரடி சாய்பாபா மகா சன்னிதானம், ஏழாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர், அவிநாசி ரோடு, காந்தி நகர் ஷீரடி சாய்பாபா மகா சன்னிதானம் ஏழாம் ஆண்டு துவக்க விழா, நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீ மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டுடன் விழா துவங்கியது. கலச ஸ்தாபனம், 1,008 சங்கு ஸ்தாபனம், 108 திரவியங்களுடன் சிறப்பு ஹோமம், மஹா பூர்ணாஹுதி, உபசார பூஜை, மஹா தீபாராதனை, ஆகியன நடைபெற்றது. அதன்பின், ஷீரடி ஸ்ரீ சாய்பாபாவுக்கு சகல திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து, 1,008 சங்கு தீர்த்த அபிஷேகம், சிறப்பு அலங்காரம் பூஜை, மகா தீபாராதனை , மகா ஆரத்தி ஆகியன நடைபெற்றது.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பகவான் சாய்பாபாவை தரிசனம் செய்து சென்றனர். 1,008 சங்கு பூஜையில் பூஜிக்கப்பட்ட அஷ்ட லட்சுமி உருவத்துடன் கூடிய ஸ்ரீ சக்ர பீடம் பங்கேற்ற அனைவரும் வழங்கப்பட்டது. விழா, ஏற்பாடுகளை திருப்பூர், ஷீரடி ஸ்ரீ சாய்பாபா மகா சன்னிதானம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.