இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவில் நிலத்தை மீட்க ஆலோசனை கூட்டம்
இடைப்பாடி: இடைப்பாடி, பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவில் நிலத்தை மீட்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. சேலம் மாவட்டம், இடைப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலம், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. இந்த நிலத்தில், திருமணம் மண்டபம் கட்ட தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த நிலத்திற்கு அருகே, 4.69 ஏக்கர் நிலம் தற்போது தனியார் ஒருவரிடம் உள்ளது. இந்த நிலம் இடைப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான எனக்கூறி, சேலம், ராதாகிருஷ்ணன், சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத்திடம் புகார் மனு மனு அளித்தார். மேலும், இந்த நிலம் சம்மந்தமான ஆவணங்களை தர வேண்டும் எனக்கூறி இடைப்பாடி சார்-பதிவாளருக்கும் கடிதம் கொடுத்து இருந்தார். சார்-பதிவாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், 1972ல் பாகப்பிரிவினை மூலம் இந்த நிலம் மீனாட்சியம்மாள் என்பவருக்கு சொந்தமாகியுள்ளது. அதற்கு பிறகு பலரிடம் விற்கப்பட்டுள்ளது என்றும், 1972க்கு முன்னர், இந்த நிலத்திற்கான ஆவணங்கள் எதுவும் பதியப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, 1972க்கு முன்பு கோவில் பெயரில் இருந்த இந்த நிலத்தின் பட்டாவை ரத்து செய்து, நிலத்தை மீட்டு தரவேண்டும் என, ராதா கிருஷ்ணன், கொடுத்த புகாரையடுத்து, நேற்று இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், சங்ககிரி ஆர்.டி.ஓ., பால் பிரின்ஸி ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அந்த நிலம் சம்மந்தமான ஆவணங்களை தாசில்தார் சண்முகவள்ளி, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் ஆர்.ஐ., கேசவன், வி,ஏ,ஓ., அப்புசாமி ஆகியோரிடம் விளக்கம் கேட்டனர். மீண்டும் விரைவில் மற்றொரு கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.