கார்த்திகை அமாவாசை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்
ADDED :3570 days ago
ராமேஸ்வரம்: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
கார்த்திகை அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் கோயிலுக்கு தமிழகத்தின் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். பக்தர்கள் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி, அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து, அக்னி கடலில் புனித நீராடினார்கள். பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன் பின் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் வரிசையில் நின்று பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் செல்வராஜ் செய்திருந்தார்.