திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு வஸ்திரம்
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், கார்த்திகை மாதம் ஏகாதசி நாளில், கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்நாளில், உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியதும், 365 வஸ்திரங்கள், 365 தாம்பூலங்கள், 365 ஆரத்திகள் சமர்ப்பிக்கப்படும். இந்த விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் திருமலை, திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கப்படும். அதன்படி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள், தாயார் ஆகியோருக்கு வஸ்திரங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் எடுத்து வரப்பட்டது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் மற்றும் நிர்வாகிகள், ஆண்டாள் யானை முன் செல்ல, ரங்கவிலாஸ் மண்டபத்தில் இருந்து, வஸ்திரங்களையும் மங்களப் பொருட்களையும் கருட மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவன சேர்மனும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவருமான வேணு சீனிவாசன் உட்பட, கோவில் நிர்வாகிகள் வஸ்திர மரியாதையை பெற்றுக் கொண்டனர்.இதை தொடர்ந்து, கைசிக ஏகாதசி உற்சவம் துவங்கியது.