எச்சில் இலை மீது அங்க பிரதட்சணம்
கொடுமுடி: திருவண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகளின் சூக்கு யோக சமாதி, ஊஞ்சலூர் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும், டிசம்பர் மாதத்தில், மூன்றாவது வாரத்தில் ஆராதனை விழா நடக்கும். நடப்பாண்டில், சேஷாத்திரி சுவாமிகளின், 88ம் ஆண்டு ஆராதனை விழா, கடந்த, 17ல் தொடங்கி விமர்சையாக நடந்தது. இதில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். நிறைவு நாளான நேற்று அதிகாலை, தனுர் மாத பூஜை, உஞ்ச விருத்தி நடந்தது. பலவித நறுமண பொருட்கள், பழங்கள் மற்றும் ஏராளமான பூக்களால் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து திறந்த வெளியில், கோவில் முன் அன்னதானம் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், மக்கள் உணவருந்தினர். அன்னதானம் நிறைவடைந்த பின், எச்சில் இலைகள் மீது, ஆண் மற்றும் பெண் பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.