மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் திருவெம்பாவை உற்சவம்
மயிலாடுதுறை: நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான மாயூரநாதர் கோவில் உள்ளது. இங்கு திருவெம்பாவை உற்சவம் நடந்து வருகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் மிகப்பழமை வாய்ந்ததும், பார்வதிதேவி அபயாம்பிகை என்ற பெயரில் மயில் வடிவம் எடுத்து சிவனை வழிபட்டதுமான இந்தக் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை உற்சவம் சிறப்பாக நடக்கும். இதையொட்டி, மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் துவங்கியது. ஜன. 11 வரை கொண்டாடப்படும் இவ்விழாவில் காலையும் மாலையும் நடராஜப்பெருமான் சன்னிதியில் திருவெம்பாவைப் பாடல்கள் பாடப்படும். மாலை 6.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதினப் புலவர்களால் சிறப்பு சொற்பொழிவு ‘பாவை விழா‘ என்னும் தலைப்பில் நடைபெறும். மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளது. ஆலய கண்காணிப்பாளர் குருமூர்த்தி கணேசன், பேராசிரியர் சம்பந்தமூர்த்தி ராஜமாணிக்கம், திருவிடைமருதூர் மகாலிங்கம் முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.