உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் வைகுண்ட ஏகாதசி

உடுமலை கோவில்களில் வைகுண்ட ஏகாதசி

உடுமலை: உடுமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலுள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கொண்டாடப்பட்டது.  மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. உடுமலை பெரியகடைவீதி நவநீத கிருஷ்ணன் கோவிலில் காலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதற்கான பூஜைகள் நேற்றுமுன்தினம் முதலே அனைத்து கோவில்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. சொர்க்கவாசல் திறப்பினை காண்பதற்காக நேற்று முன்தினம் இரவு முழுவதும் பக்தர்கள் கண்விழித்து காத்திருந்தனர். தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு திருவாய்மொழி முதலாம் பத்து பாசுரங்கள் சேவையும் நடந்தது. ஸ்ரீபூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை அருகேயுள்ள பெரியபட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச அனுமந்த பெருமாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாளுக்கு இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம், நைவேத்யம், தீபாராதனையும், இரவு, 9:00 மணிக்கு பெருமாள் திருவீதி உலாவும் நடந்தன. பிரசன்ன விநாயகர் கோவிலுள்ள சவுரிராஜ பெருமாள், நெல்லுக்கடை வீதி சவுந்திரராஜ பெருமாள் கோவில், பெரியவாளவாடி கரிவரதராஜ பெருமாள் கோவில் உட்பட சுற்றுப்பகுதியிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறப்பு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !