உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாளிகைப்புறத்தில் அய்யப்பன் இன்று முதல் எழுந்தருளல்

மாளிகைப்புறத்தில் அய்யப்பன் இன்று முதல் எழுந்தருளல்

சபரிமலை: சபரிமலையில் நேற்று முன்தினம் மகரவிளக்கு விழா நிறைவு பெற்றது. தொடர்ந்து, 19ம் தேதி வரை பூஜைகள் நடக்கின்றன. இதில் தினமும் இரவு, 9:30 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் சன்னிதானம் முன் எழுந்தருளுகிறார். மாளிகைப்புறத்தம்மன், அய்யப்பனை திருமணம் செய்வதற்கான வேண்டுதலுடன் செல்வதாக ஐதீகம். 17-ம் தேதி வரை எழுந்தருளல் நடக்கிறது. கன்னி அய்யப்பன் சபரிமலைக்கு வராத ஆண்டில் திருமணம் செய்வதாக அய்யப்பன் கூறியதன் பேரில், 18-ம் தேதி சரங்குத்திக்கு மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளுவார். அங்கு கன்னி அய்யப்ப பக்தர்கள் வந்ததன் அடையாளமாக மலை போல் குவிந்துள்ள சரக்கோலை கண்டு ஆரவாரம் இல்லாமல் கோவிலுக்கு திரும்புவார். கடந்த ஆண்டு இந்த பவனிக்காக வந்த யானை தாக்கி ஒரு பெண் பக்தர் இறந்ததால், மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு மாளிகைப்புறத்தம்மன் விக்கிரகத்தை பூஜாரிகள் சுமந்து வருகின்றனர். இன்று முதல், 19-ம் தேதி வரை படி பூஜை நடக்கிறது. மாலையில், தீபாராதனைக்கு பின், இரவு, 7:00 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு தலைமையில் இந்த பூஜை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !