உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகரம் முருகன் கோவிலில் இன்று தைப்பூச தேரோட்டம்

அகரம் முருகன் கோவிலில் இன்று தைப்பூச தேரோட்டம்

ஓசூர: ஓசூர் அடுத்த அகரம் முருகன் கோவிலில், இன்று (பிப். 9) தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில், பாலமுருகன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச தேரோட்டம் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்ட திருவிழா, நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு, பால்கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை, நவக்கிரக பூஜை, பிரகார பூஜை, திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, இன்று (பிப். 9) காலை, 6:00 மணி முதல், 10:15 வரை, பாலமுருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.தொடர்ந்து காலை, 10:45 மணிக்கு, தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. அகரம் பகுதி பொதுமக்கள், தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர். முக்கிய வீதிகள் வழியாக தேர் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இரவு, 9:00 மணிக்கு, நாதஸ்வர கச்சேரி மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. கோவிலுக்கு பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தனப்பள்ளி போலீசார் தீவிரமாக செய்து வருகின்றனர். நாளை (பிப். 10) இரவு, 9:00 மணிக்கு, முத்து பல்லக்கு உற்சவம், 11 மாலை, 4:30 மணிக்கு, தெப்ப உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !