வெள்ளாத்துாரம்மனுக்கு சொர்ணாபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: வெள்ளாத்துாரம்மனுக்கு நேற்று வெள்ளிக்கிழமையை ஒட்டி, சந்தனம், மஞ்சள் மற்றும் சொர்ணாபிஷேகம் என, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த வெள்ளாத்துாரில் அமைந்துள்ள வெள்ளாத்துாரம்மன் கோவிலில், நேற்று மாசி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, பால், பன்னீர், தேன், மஞ்சள், சந்தனம் என, பல்வேறு அபிஷேகங்களின் நிறைவாக, சொர்ணாபிஷேகம் எனும், தங்க ஆபரணங்களின் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, மலர் மாலை மற்றும் எலுமிச்சை மாலைகளால், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வங்கனுார், புச்சிரெட்டிநபள்ளி, ஸ்ரீகாளிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள், திரளாக இதில் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.