பழநியில் விரைவில் இரண்டாவது ’ரோப்கார்’; ஆணையர் தகவல்
பழநி, ’பழநி மலைக்கோயிலில் விரைவில் இரண்டாவது ’ரோப்கார்’ அமைக்கப்பட உள்ளது’ என, இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி தெரிவித்தார். பழநியில் அவர் கூறியதாவது: பழநி கோயிலில் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம், அவசரப் பணியிடங்களை நியமனம் செய்து கொள்ள கோயில் நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் இரண்டாவது ’ரோப்கார்’ அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. விரைவில் பணிகள் துவங்கப்படும். தைப்பூசத்தின் போது பக்தர்களுக்கு ’ஷவர்’ மூலம் குளிக்க ஏற்பாடு செய்தோம். வருங்காலங்களில் விழா நாட்கள் மட்டுமின்றி தைப்பூசத்திற்கு முன்பே பொங்கல் விடுமுறையில் வரும் பக்தர்களுக்கும் வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்து வரும் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்றவை குறித்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள், அமைப்பினரையும் அழைத்து கருத்து கேட்போம். கோயிலில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பணிக்கொடை வழக்கு தொடர்பான கோப்புகள் அந்தந்த கோயில் நிர்வாகத்தினர் வசம் உள்ளது, அவர்களே அதனை பார்த்துகொள்வர். இவ்வாறு அவர் கூறினார்.