உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / "ஹரிஹர ஸ்லோகத்தால் மோட்சம் கிடைக்கும்

"ஹரிஹர ஸ்லோகத்தால் மோட்சம் கிடைக்கும்

சேலம்: ஹரிஹர ஸ்லோகத்தை, தினமும் பாராயணம் செய்தால், ஞானம், மோட்சம் மனிதனுக்கு கிடைக்கும், என, சிருங்கேரி மடாதிபதி ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள் பக்தர்களுக்கு அருளுரை வழங்கினார். கர்நாடக மாநிலம், சிருங்கேரி மடாதிபதிகள் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சுவாமிகள், ஸ்ரீவிது சேகர பாரதீ சுவாமிகள், தமிழகத்தில் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம், சேலத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு வருகை தந்தனர். சுவாமிகளுக்கு பக்தர்கள், பூர்ணகும்ப மரியாதை அளித்தனர். சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ச்சியாக, நேற்று காலை இருவரும், சேலம் டவுன் தர்மசாஸ்தா கோவிலுக்கு சென்றனர். அங்கு, கோ பூஜை செய்து, பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.
ஸ்ரீவிது சேகர பாரதீ தீர்த்த சுவாமிகள் பேசியதாவது: இக்கோவிலில் ஹரியும், ஹரனும் ஒன்றாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஹரியை வழிபடுவதன் மூலம் ஞானமும், ஹரனை வழிபடுவதன் மூலம் மோட்சமும் கிடைக்கும். அதேபோல் தினசரி ஹரிஹர ஸ்லோகத்தை பாராயணம் செய்வதன் மூலம் ஞானம், மோட்சம் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். பின், சுவாமிகள் சிருங்கேரி சங்கர மடத்திற்கு காலை, 10:00 மணிக்கு சென்றனர். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர். சுவாமிகள் இருவரும், பக்தர்களை ஆசீர்வதித்து, பிரசாதம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !