ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர் சீரமைப்பு
ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜரின், ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேர் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருஅவதார திருவிழா, ஏப்., 21 முதல் மே, 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு, கோவில் மண்டபம், சன்னிதிகள் புனரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே இருந்த குண்டும், குழியுமான சாலை மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தால், இரண்டு ஆண்டுகளாக பெரிய தேரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சிறிய தேரை கோவில் நிர்வாகத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த ஆண்டு ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திரு அவதார விழா என்பதால், பெரிய தேரை மீண்டும் பயன்படுத்த உள்ளனர்.
இதற்காக தேரை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தேரை திசை திருப்பி இயக்க, முன்புற சக்கரம் அதிகம் பயன்படுத்தப்படும். முன்புறம் சக்கரம், தற்போது பழுதாக இருப்பதால் அதை சீரமைத்து வருகின்றனர். தேரின் முன்சக்கரங்களை பின்புறத்திலும், பின்புற சக்கரத்தை கழற்றி முன்புறமும் மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், சேதமடைந்த கலைநயமிக்க வடிவங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகளும், தேருக்கு கண்கவர் வர்ணம் தீட்டும் பணிகளை செய்யவும் பிரத்யேக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின், புது பொலிவுடன் பெரிய தேர் விழா நடைபெற உள்ளது.