உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவில் குளம் துார் வாரப்படுமா?

பிரளயகாலேஸ்வரர் கோவில் குளம் துார் வாரப்படுமா?

பெண்ணாடம்: பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெண்ணாடம் பிரள‌யகாலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி, பிரதோஷம் மற்றும் வார, மாத வழிபாடுகள் சிறப்பாக நடக்கும். சித்திரை மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடக்கும். சித்திரை திருவிழாவில் 9ம் நாள் தேர் திரு விழாவும், 10ம் நாள் தெப்பல் உற்சவமும் நடப்பது வழக்கம். ஆனால், கோவில் குளம் பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் இருப்பதால்,  சம்பு, கோரை புற்கள் அதிகளவில் மண்டியுள்ளன. இதனால் பல ஆண்டுகளாக தெப்பல் உற்சவம் நடத்துவது  நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கும் கோவில் குளத்தில், அருகில் வசிப்பவர்கள் கழிவு நீரை விட்டனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குளத்தை பார்வையிட்டு, அதில் கழிவு நீர் விடும் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்க செயல் அலுவலர் கொளஞ்சிக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து, குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, கழிவு நீர் விடுவது நிறுத்தப்பட்டது.  கடந்த 3 மாதங்களுக்கு முன் குளம் துார்வாரும் பணி துவங்கிய நிலையில்,  இந்தாண்டு சித்திரை தேர் திருவிழாவின் போது தெப்ப உற்சவம் நடக்கும் என பக்தர்கள், பொது மக்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் ஒரு நாள் மட்டுமே நடந்த துார் வாரும் ப‌ணி கிடப்பில் போடப்பட்டதால் பொது மக்கள், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனவே, பிரளயகாலேஸ்வரர் கோவில் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !