ராமானுஜர் சன்னிதியை பூட்டி வைத்துள்ள ஜீயர்?
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதுார் யதிராஜ ஜீயர் மடத்தில், ராமானுஜர் சன்னிதியை தரிசிக்க விடாமல், ஜீயர் பூட்டி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம், யதிராஜ ஜீயர் மடத்து சிஷ்ய சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில், நேற்று காலை, 11:00 மணிக்கு நடைபெற்றது. அப்போது, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள யதிராஜ ஜீயர் மடத்து சிஷ்ய சங்கத்தினர் அளித்த புகார் மனு:
ராமானுஜரின் அவதார விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களை, வெயிலில் இருந்து காக்க தற்காலிக கூடாரங்களை அமைக்க வேண்டும். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்
ராமானுஜரின் சமுதாய சீர்திருத்தங்கள் பற்றி டிஜிட்டல் பேனர்களை, 1,000 இடங்களில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும்
உற்சவம் நடைபெறும், 21 நாட்களுக்கு, ராமானுஜரின் வாழ்க்கை சரித்திர நாடகம், கலை நிகழ்ச்சி, ஒலி - ஒளி காட்சிகள், எங்கள் சபா மூலம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும்
யதிராஜ ஜீயர் மடத்தில் உள்ள ராமானுஜர் சன்னிதியை, மடத்து சிஷ்யர்கள், பொதுமக்கள் தரிசிக்க விடாமல், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜீயர், கடந்த, ஐந்தாண்டுகளாக பூட்டி வைத்துள்ளார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.