சிவன்மலை உத்தரவு பெட்டியில் உலக உருண்டை! போர் மூளூமா?
காங்கேயம்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில், உலக உருண்டை வைக்க உத்தரவாகியுள்ளது. இதனால், உலகப்போர் மூளூம் என, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி பிரசித்தி பெற்றது. நாட்டில் நடக்க இருக்கும் இன்ப, துன்ப நிகழ்வுகளை முன்னதாகவே உணர்த்துவதால், இங்கு எழுந்தருளியிருக்கும் முருகனுக்கு காரணமூர்த்தி என்று பெயர். சிவன்மலை ஆண்டவர் பக்தர்களின் கனவில் வந்து குறிப்பிடும் பொருட்களை உத்தரவுப் பெட்டியில் வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, பூமாலை, இரும்புச் சங்கிலி, ருத்ராட்சம் என, பல்வேறு பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் வலம்புரிச் சங்கு வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை, பம்மல், சங்கு நகரைச் சேர்ந்த நீலகண்ட மகரிஷி என்பவர் கனவில், உலக உருண்டை வைக்கும்படி உத்தரவானது. இதையடுத்து, ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில், உலக உருண்டை வைக்கப்பட்டது. முன்பு, துப்பாக்கி வைத்தபோது, கார்கில் போரில் இந்தியா வென்றது. தற்போது வடகொரிய மற்றும் அமொரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், உத்தரவுப் பெட்டியில் உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால், மூன்றாம் உலகப்போர் மூள்வதற்கான அறிகுறியா? என, பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில் சிவாச்சாரியார் கூறியதாவது: உத்தரவுப் பெட்டியில், எந்தப் பொருள் வைக்கப்படுகிறதோ அந்தப் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். உலக உருண்டை வைக்கப்பட்டுள்ளதால் உலகம் முழுவதும் ஆன்மீகம், யோகா குறித்த விழிப்புணர்வு அதிகாரிக்கும். வெப்பம் அதிகரித்ததால் தீ விபத்துகள், மற்றொருபுரம் தண்ணீரினால் பாதிப்புகள் ஏற்படும். இதன் தாக்கம் போகப் போகத்தான் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.