கல் அடுக்கினால் வீடு கட்டலாம்: மீனாட்சி கோயிலில் வினோதம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புரனமைப்பு பணி நடக்கிறது. இதற்காக செதுக்கப்பட்ட புதிய கற்துாண்கள் மீது, கற்களை அடுக்கி வழிபட்டால் வீடு கட்டலாம் என்ற வினோத நம்பிக்கை பக்தர்களிடையே பரவுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் மேற்கூரைப் பகுதிகளில், சிதிலமடைந்த கற்துாண்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, மூன்று கோடி ரூபாயில் புரனமைக்கும் பணி நடக்கிறது. புதிய கற்துாண்கள் பதிக்கும் பணியில், தஞ்சாவூர் ஸ்தபதிகள் பல மாதங்களாக ஈடுபட்டுள்ளனர். புதிய கற்துாண்கள், பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே வைக்கப்பட்டுள்ளன.
புதிய கற்துாண்கள் மீது கற்களை அடுக்கி வழிபட்டால் வீடு கட்டும் யோகம் கிடைக்கும் என பக்தர்களிடையே நம்பிக்கை பரவி வருகிறது. சுவாமி சன்னதியில் வழிபாடு நடத்தி விட்டு, பழைய திருக்கல்யாணம் மண்டபம் வழியாக வரும் பக்தர்கள், கற்துாண்கள் மீது சிறிய கற்களை அடுக்கி வைத்து நீண்ட நேரம் வழிபடுகின்றனர். இதற்காக சிலர், சிறிய கற்களை வெளியில் இருந்தும் கொண்டு வருகின்றனர். போலீசாரின் தீவிர சோதனையில் இருந்தும் கல் தப்பி விடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலா தோரணம்: தேனி மாவட்டம் நாச்சியார்புரம் பக்தர் பாக்கியலட்சுமி கூறியதாவது: திருப்பதி கோயிலில் தரிசனம் செய்து திரும்புவோர், சிலா தோரணம் என்ற பகுதியில் பாறைகளில் கற்களை அடுக்கி வைப்பதை பார்த்தேன்; கற்களை அடுக்கி வழிபட்டால், கேட்ட வரம் கிடைக்கும் என்றனர். அதேபோல மீனாட்சி அம்மன் கோயில் பழைய திருக்கல்யாண மண்டபம் எதிரே, கற்துாண்கள் மீது கற்களை அடுக்கி சிலர் வழிபடுவதை பார்த்தேன்; இதனால் நானும் வழிபட்டேன், என்றார்.
அர்ச்சகர் கருத்து: மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறியதாவது: இக்கோயிலுக்குள் நுழைவதே பெரும் பாக்கியம்தான். அம்மன், சுவாமியை வழிபட்டு சென்றாலே போதும். சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது தொன்று தொட்டு நிலவும் இறை நம்பிக்கை. அதை கொடு, இதை கொடு என வேண்டுவது கூடாது. கோயிலில் அமைதியாக வழிபாடு நடத்தி தியானம் செய்ய வேண்டும். கற்துாண்கள் மீது கற்களை வைத்து வழிபடுவது அவரவர் நம்பிக்கையாக இருந்தாலும், இதுபோன்ற வினோதங்களை பக்தர்கள் தவிர்க்க வேண்டும், என்றார்.