பழவேற்காடு திரவுபதி அம்மன் கும்பாபிஷேகம் கோலாகலம்
பழவேற்காடு:பழவேற்காடு, திரவுபதியம்மன் கோவிலில், கும்பாபிஷேக விழா, வெகு விமரிசையாக நடந்தது.பழவேற்காடு பகுதியில், 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த
திரவுபதியம்மன் கோவில் உள்ளது. கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து, நேற்று, மகா கும்பாபிஷேக விழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு, வேதங்கள் முழங்க, மங்கள இசையுடன், அம்மன் சன்னதி மீது இருந்த கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
பகல், 12:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதிஉலா நடந்தது. கும்பாபிஷேக விழாவில், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, திரவுபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூர்: பெரியகுப்பம், கற்குழாய் தெருவில் உள்ளது நாகாத்தம்மன் கோவில். இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது, முன்னதாக, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 5ம் தேதி, காலை கணபதி ஹோமமும், லட்சுமி பூஜையும் நடந்தது.
மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம், காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலையில், மூன்றாம் கால யாக சாலை பூஜையும்
நடந்தது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜை நடந்தது. அதன் பின், காலை 8:00 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு, புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா
கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு மகா தீபாராதனையும் நடந்தது.
இரவு 7:00 மணிக்கு, உற்சவர் நாகாத்தம்மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதிஉலா நடந்தது. இதில், திருவள்ளூர், மணவாள நகர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பகுதிவாசிகள் கலந்து கொண்டனர்.