உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதாநதியில் பக்தர்களின் வெள்ளத்தில் இறங்கினார் அழகர்

மருதாநதியில் பக்தர்களின் வெள்ளத்தில் இறங்கினார் அழகர்

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதியில் வரதராஜ பெருமாள் அழகர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் இறங்கினார். கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் அவரை வரவேற்றனர். சித்தரேவு வரதராஜபெருமாள் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா திருக்கல்யாணத்துடன் துவங்கியது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு பெருமாள் குதிரை வாகனத்தில் சன்னதியிலிருந்து புறப்பட்டார். நேற்று காலை 7:25 மணிக்கு அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோவிந்தா கோஷங்களுடன் பக்தர்கள் பெருமாளை வரவேற்றனர். ஆற்றில் தீர்த்தவாரியும், யாதவர் குல எதிர்சேவையும் நடந்தது. தொடர்ந்து பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பெருமாள் அய்யனார் கோயில், அழகர் பொட்டலில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் ஆயிர வைஸ்ய மண்டகப்படியில் நேற்று இரவு தங்கினார். இன்று இச்சமூகத்தினரால் தசாவதாரம் நடக்கிறது. நாளை மாலை 4:00 மணிக்கு மேல் பெருமாள், ஆஞ்சநேயர் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வந்து பெரிய முத்தாலம்மன் கோயிலில் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மே 13ல் அய்யம்பாளையம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சித்தரேவு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புறப்படுகிறார்.  இதையொட்டி பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் சவுந்தர் மருதாநதி அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் திறந்து விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !