தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்
அரூர்: அரூர் அடுத்த தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி அமைச்சர் அன்பழகன் தலைமையில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது. அரூர் அடுத்த தீர்த்தமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உலக நன்மைக்காவும், மழை வேண்டியும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., சார்பில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில், நேற்று சிறப்பு யாகம் நடந்தது. நேற்று காலை, 6:55 மணிக்கு துவங்கி, 7:50 மணிக்கு முடிந்த வருண ஜெப பூஜையில், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பங்கேற்றார். இதில், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
* ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, காளிகாம்பாள், காமடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அ.தி.மு.க., சார்பில், மழை வேண்டி நேற்று வருண ஜெபம் நடந்தது. கோவில் முன் இருந்த நந்திக்கு தொட்டி கட்டி கழுத்தளவு தண்ணீர் நிரப்பி, இசை வாத்தியங்கள் முழங்க, சிறப்பு பூஜை செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, கோவில் செயல் அலுவலர் ராஜரத்தினம், அ.தி.மு.க., நகர செயலாளர் பால்நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் ஆகியோர் முன்னிலையில், வருண யாகம் மற்றும் கலச பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.