உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 7. துயிலெழுப்பிய காதை

7. துயிலெழுப்பிய காதை

ஏழாவது மணிமேகலா தெய்வம் உவவனம் புகுந்து சுதமதியைத் துயிலெழுப்பிய பாட்டு

அஃதாவது: மணிமேகலையை உவவனத்தினின்றும் எடுத்துப் போய் முப்பது யோசனைத் தொலைவில் கடலினுள்ளிருக்கும் மணிபல்லவம் என்னும் தீவின்கண் வைத்து அவ்விடத்தினின்றும் மீண்டும் புகார் நகரத்து உவவனத்தினூடே துயிலில் ஆழ்ந்திருந்த சுதமதியை எழுப்பித் தான் செய்தமையைக் கூறி மாதவிக்கும் அந் நற்செய்தியைக் கூறும்படி பணித்து மறைந்த செய்தியைக் கூறுஞ் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- உவவனத்தின்கண் மணிமேகலையைக் கண்ணெதிரே கண்டு வைத்தும்; அவளது மடங்கெழுநோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி தன் நெஞ்சத்திளைமையானை கல்விப்பாகன் கையகப்படா அது ஒல்காவுள்ளத் தோடுமாயினும் ஒழுக்கொடு புணர்ந்த விழுக்குடிப் பிறந்தோ னாதலின் பகவனது ஆணையிற் பன்மரம் பூக்கும் அத் தெய்வப் பூம்பொழிலில் அவளைக் கைப்பற்றுதல் குடிப்பழியாம் என்றஞ்சி அகன்ற அரசிளங் குமரனாகிய உதயகுமரன் தன் அரண்மனைக்கண் காம நோயாற் பெரிதும் வருந்தி நாளைக்கு அவளை யான் எப்படியும் கைப்பற்றுவேன் என்னும் துணிவுடன் பொங்கு மெல்லமளியில் கண்டுயிலாது கிடந்தோன் முன்னர், மணிமேகலா தெய்வம் தோன்றி மன்னறம் கூறி மன்னவன் மகனே! தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்றறிவுறுத்து அப்பால் உவவனத்திலே துயில் கொண்டிருந்த சுதமதியை எழுப்பித் தான் மணிமேகலா தெய்வம் என்றறிவித்து மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாலின் அவளை நன்னெறிக்கட் செலுத்தவே யான் எடுத்துப் போயினேன், என்னை மாதவி முன்னரே அறிகுவள், மணிமேகலை இற்றைக்கு ஏழா நாள் நலம் பல எய்தி இங்கு வந்து சேர்வாள் என்று கூறும் அத் தெய்வத்தின் அருட்டிறமும், பின்னர்ச் சுதமதி சக்கரவாளக் கோட்டம் புக்கதும்; ஆங்குக் கந்திற் பாவை சுதமதிக்குக் கூறும் அற்புதக் கிளவியும்; இரவு வண்ணனையும் பெரிதும் இன்பம் பயப்பனவாக அமைந்திருத்தலைக் காணலாம்.

மணிமேகலை தனை மணிபல்லவத்திடை
மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி
மணிமேகலை தனை மலர்ப் பொழில் கண்ட
உதயகுமரன் உறு துயர் எய்தி
கங்குல் கழியின் என் கை அகத்தாள் என
பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன்
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே!
கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்
கோள் நிலை திரிந்திடின் மாரி வறம் கூரும்
மாரி வறம் கூரின் மன் உயிர் இல்லை  07-010

மன் உயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன்
தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்
தவத் திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத் திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்த பின்
உவவனம் புகுந்து ஆங்கு உறு துயில் கொள்ளும்
சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந் நகர்க் காண
வந்தேன் அஞ்சல் மணிமேகலை யான்
ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம்
ஏது முதிர்ந்தது இளங்கொடிக்கு ஆதலின்  07-020

விஞ்சையின் பெயர்த்து நின் விளங்கு இழை தன்னை ஓர்
வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்து ஈங்கு
இன்று ஏழ் நாளில் இந் நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லாள்
களிப்பு மாண் செல்வக் காவல் பேர் ஊர்
ஒளித்து உரு எய்தினும் உன்திறம் ஒளியாள்
ஆங்கு அவள் இந் நகர் புகுந்த அந் நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பல உள
மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும்  07-030

ஏதும் இல் நெறி மகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீ அவள் என் திறம் உணரும்
"திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு" என
கோவலன் கூறி இக் கொடி இடை தன்னை என்
நாமம் செய்த நல் நாள் நள் இருள்
"காமன் கையறக் கடு நவை அறுக்கும்
மா பெருந் தவக்கொடி ஈன்றனை" என்றே
நனவே போலக் கனவு அகத்து உரைத்தேன்
ஈங்கு இவ் வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று
அந்தரத்து எழுந்து ஆங்கு அருந் தெய்வம் போய பின்  07-040

வெந் துயர் எய்தி சுதமதி எழுந்து ஆங்கு
அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு
வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்
கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று
பண்ணுக் கிளை பயிரும் பண் யாழ்த் தீம் தொடை
கொளை வல் ஆயமோடு இசை கூட்டுண்டு
வளை சேர் செங் கை மெல் விரல் உதைத்த
வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்
பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது  07-050

உண் கண் சிவந்து ஆங்கு ஒல்கு கொடி போன்று
தெருட்டவும் தெருளாது ஊடலோடு துயில்வோர்
விரைப் பூம் பள்ளி வீழ் துணை தழுவவும்
தளர் நடை ஆயமொடு தங்காது ஓடி
விளையாடு சிறு தேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலி
குதலைச் செவ் வாய் குறு நடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபம் காட்டி தூங்கு துயில் வதியவும்
இறை உறை புறவும் நிறை நீர்ப் புள்ளும்  07-060

கா உறை பறவையும் நா உள் அழுந்தி
விழவுக் களி அடங்கி முழவுக் கண் துயின்று
பழ விறல் மூதூர் பாயல் கொள் நடு நாள்
கோமகன் கோயில் குறு நீர்க் கன்னலின்
யாமம் கொள்பவர் ஏத்து ஒலி அரவமும்
உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து
நிறை அழி யானை நெடுங் கூ விளியும்
தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்
ஊர் காப்பாளர் எறி துடி ஓதையும்
முழங்கு நீர் முன் துறைக் கலம் புணர் கம்மியர்  07-070

துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ் செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்
அர வாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்து
புதல்வரைப் பயந்த புனிறு தீர் கயக்கம்
தீர் வினை மகளிர் குளன் ஆடு அரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவர் இன்றியும்
புலிக் கணத்து அன்னோர் பூத சதுக்கத்து
கொடித் தேர் வேந்தன் கொற்றம் கொள்க என
இடிக் குரல் முழக்கத்து இடும் பலி ஓதையும்  07-080

ஈற்று இளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ் சூல் மகளிர் நெடும் புண் உற்றோர்
தம் துயர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்து கைக்கொள்க என
நின்று எறி பலியின் நெடுங் குரல் ஓதையும்
பல் வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்ப
கேட்டு உளம் கலங்கி ஊட்டு இருள் அழுவத்து
முருந்து ஏர் இள நகை நீங்கிப் பூம்பொழில்
திருந்து எயில் குடபால் சிறு புழை போகி
மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து உரைத்த  07-090

சக்கரவாளக் கோட்டத்து ஆங்கண்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவியின் ஒரு புடை இருத்தலும்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
அந்தில் எழுதிய அற்புதப் பாவை
மைத் தடங் கண்ணாள் மயங்கினள் வெருவ
திப்பியம் உரைக்கும் தெய்வக் கிளவியின்
இரவிவன்மன் ஒரு பெரு மகளே!
துரகத் தானைத் துச்சயன் தேவி!
தயங்கு இணர்க் கோதை தாரை சாவுற  07-100

மயங்கி யானை முன் மன் உயிர் நீத்தோய்!
காராளர் சண்பையில் கௌசிகன் மகளே!
மாருதவேகனோடு இந் நகர் புகுந்து
தாரை தவ்வை தன்னொடு கூடிய
வீரை ஆகிய சுதமதி கேளாய்!
இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து
தன் பிறப்பு அதனொடு நின் பிறப்பு உணர்ந்து ஈங்கு
இலக்குமி ஆகிய நினக்கு இளையாள் வரும்
அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு
நெஞ்சம் நடுக்குறூஉம் நேர் இழை நல்லாள்  07-110

காவலாளர் கண் துயில்கொள்ளத்
தூ மென் சேக்கைத் துயில் கண் விழிப்ப
வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்பப்
புலம் புரிச் சங்கம் பொருளொடு முழங்கப்
புகர் முக வாரணம் நெடுங் கூ விளிப்ப
பொறி மயிர் வாரணம் குறுங் கூ விளிப்ப
பணை நிலைப் புரவி பல எழுந்து ஆலப்
பணை நிலைப் புள்ளும் பல எழுந்து ஆலப்
பூம்பொழில் ஆர்கைப் புள் ஒலி சிறப்பப்
பூங்கொடியார் கைப் புள் ஒலி சிறப்பக்  07-120

கடவுள் பீடிகைப் பூப் பலி கடைகொளக்
கலம் பகர் பீடிகைப் பூப் பலி கடை கொளக்
குயிலுவர் கடைதொறும் பண் இயம் பரந்து எழக்
கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் பரந்து எழ
ஊர் துயில் எடுப்ப உரவுநீர் அழுவத்துக்
கார் இருள் சீத்து கதிரவன் முளைத்தலும்
ஏ உறு மஞ்ஞையின் இனைந்து அடி வருந்த
மா நகர் வீதி மருங்கில் போகி
போய கங்குலில் புகுந்ததை எல்லாம்
மாதவி தனக்கு வழு இன்று உரைத்தலும்  07-130

நல் மணி இழந்த நாகம் போன்று அவள்
தன் மகள் வாராத் தனித் துயர் உழப்ப
இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்
துன்னியது உரைத்த சுதமதி தான் என்  07-134

உதயகுமரன் முன்னர் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றல்

1-7: மணிமே...... தோன்றி

(இதன் பொருள்) மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை மணிமேகலைதனை வைத்து நீங்கி-இவ்வாறு மணிமேகலா தெய்வமானது உவவனத்தினின்று முப்பதி யோசனைத் தூரத்தில் தென் கடலிற் கிடக்கும் மணிபல்லவம் என்னும் தீவினிடை மணிமேகலையைக் கொடுபோய்த் துயில் கலையாவண்ணம் மெத்தென வைத்துப் பின்னர் அத் தீவினின்றும் நீங்கி; மணிமேகலைதனை மலர்ப்பொழில் கண்ட உதயகுமரன் உறுதுயர் எய்தி-அம் மணிமேகலையைப் பகவனதாணையில் பல்மரம் பூக்கும் தெய்வத்தன்மையுடைய உவவனமாகிய மலர்ப் பொழிலிற் கண்ட அரசிளங்குமரனாகிய உதயகுமரன் அவ்விடத்தே அவளைக் கைப் பற்றுதற்கஞ்சி மீண்டவன் மிக்க காமநோயாலே வருந்தி; கங்குல் கழியில் என் கையகத்தாள் என-இற்றை நாளிரவு கழிந்தக்கால் அவள் என் கையகத்தே இருப்பாள் அதற்காவன செய்குவல் என்னும் துணிவோடு பொங்கு மெல் அமளியில் பொருந்தாது இருந்தோன் முன்னர்த் தோன்றி-ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுயர்ந்த மெல்லிய படுக்கையின் மேலே கண்ணிமைகள் பொருந்தாமல் படர்மெலிந்திருப்பவன் கண்முன் மின்னே போலப் பெண்ணுருவங் கொண்டு நின்று என்க.

(விளக்கம்) மணிமேகலா தெய்வம் மணிமேகலையைப் பாதுகாத்துக் கடைபோக நன்னெறியிலே செலுத்தும் குறிக்கோளுடன் அவளை எடுத்து மணிபல்லவத்திடை வைத்தாலும், அவள் மீண்டும் புகார் நகரத்திற்கு வரும் பொழுது அவள் பால் கழிபெருங் காமம் கொண்டவனாய் உதயகுமரன் அவளைக் கைப்பற்றவே முயல்வான் ஆகலின் அவள் தெய்வத்தின் துணைவலியும் தவவலியும் உடையாள் என்று அவன் அறியும்படி செய்து அச்சுறுத்தற் பொருட்டு அப்பொழுதே அவன் முன் தோன்றியவாறு. இஃது எதிரதாக் காக்கும் அறிவு எனப்படும் என்னை?

எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்     (429)

என நிகழும் தமிழ் மறையும் நினைக.

மணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்குச் செங்கோல் காட்டல்

7-14: மன்னவன்.......உரைத்தபின்

(இதன் பொருள்) மன்னவன் மகனே! எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோனன்றியும், வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி யுகுநீர் நெஞ்சு சுடத் தான் தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோனுமாகிய செங்கோன் மன்னர் வழிவழிச் சிறந்து வந்த சோழ மன்னவன் மகனே! ஈதொன்று கேள்! கோல் நிலை திரிந்திடின் கோள் நிலை திரியும்-அரசன் குறிக்கொண்டு பேணுதற் கியன்ற செங்கோன்மை பிறழுமானால் வெள்ளி முதலிய கோள்கள் தம் நிலையி லியங்காமல் பிறழ்ந்தியங்கா நிற்கும்; கோள் நிலை திரிந்திடின் மாரி வறங்கூரும்-அங்ஙனம் கோள்கள் நிலை பிறழ்ந்தியங்கினாலோ மழை பொய்த்து உலகிலே வற்கட மிகாநிற்கும்; மாரி வறங்கூரின் மன்னுயிர் இல்லை-மாரி பொய்த்து வற்கட மிகுமாயின் உடம்பொடு தோன்றி நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் இறந்துபடும்; மன்னுயிர் எல்லாம் மண் ஆள் வேந்தன் தன் உயிர் என்னும் தகுதி இன்று ஆகும்-இங்ஙனம் ஆயின் உலகில் நிலைபெற்று வாழ்கின்ற உயிர்கள் எல்லாம் அரசனுடைய உயிரே ஆகும் என்று ஆன்றோர் கூறும் பெருந்தகைமை அவ்வரசன்பால் சிறிதும் இல்லையாம்; தவத்திறம் பூண்டோள் தன் மேல் வைத்த அவத்திறம் ஒழிக என்று அவன்வயின் உரைத்தபின்- செங்கோன் முறை பிறழாது அத்தகைய பெருந்தகைமையோடு அருளாட்சி புரிந்த நின்முன்னோர் நெறிநின்று நீ தானும் தவவொழுக்கத்தை மேற்கொண்டொழுகுகின்ற மணிமேகலையின்பாற் கொண்டுள்ள நின் கேட்டிற்கே காரணமான இடங்கழி காமத்தைக் கைவிட்டு விடுவாயாக! என்று அத் தெய்வம் அவனுக்குக் கூறி அச்சுறுத்திய பின்று என்க.

(விளக்கம்) மன்னவன் என்றது- செங்கோன்மை பிறழாத சிபியும் மனுவும் போன்ற புகழ் மிக்கோர் மரபின் வந்த சோழமன்னன் என்பது பட நின்றது. கோல்-அரசியலறம். அஃது ஒருபாற் கோடாது செவ்விய கோல் போறலின் செங்கோல் என வழங்கப்படும். ஈண்டு அடை மொழியின்றிக் கோல் என நின்றது. முறை கோடுதலை ஈண்டுக் கோல் திரியின் என்றார்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
யொல்லாது வானம் பெயல்   (559)

எனவரும் திருக்குறளையும் நினைக.

கோள்-மழைதரும் வெள்ளி முதலிய கோள்கள். மாரிவறங் கூர்தல்- மழை பெய்யா தொழிதல்.

மன்னுயிரெல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர் எனபதனோடு

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்
அதனால் யானுயி ரென்ப தறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே       (புறநா-186)

எனவரும் மோசிகீரனார் பொன்மொழி ஒப்புநோக்கற் பாலதாம்.

இனி ஈண்டுத் தண்டமிழ் ஆசான் சாத்தனார் கூறிய இதனை, ஆசிரியர் திருத்தக்க தேவரும் தம் பெருங்காப்பியத்தூடே( சீவக:225)

கோள்நிலை திரிந்து குறைபடப் பகல்கண் மிஞ்சி
நீணில மாரி யின்றி விளைவஃகிப் பசியும் நீடி
பூண்முலை மகளிர் பொற்பின் கற்பழிந் தறங்கண் மாறி
ஆணையிவ் வுலகு கேடாம் அரசுகோல் கோடி னென்றான்

எனப் பொன்போற் பொதிந்து வைத்துள்ளமையும் உணர்க.

தவத்திறம்- நோன்பு. அவத்திறம்- கேட்டிற்குக் காரணமான பொருந்தாக் காமம். அது கோன்முறையன்றாகலின் ஒழிக என்றறிவுறுத்தபடியாம்.

மணிமேகலா தெய்வம் உவவனத்தே சென்று சுதமதியைத் துயிலெழுப்பித் தெருண்மொழி கூறுதல்

(15- உவவனம் என்பது தொடங்கி 40- போயின் என்னுமளவும் ஒரு தொடர்)

15-25: உவவனம்.....தோன்றும்

(இதன் பொருள்) உவவனம் புகுந்து ஆங்கு உறுதுயில் கொள்ளும் சுதமதி தன்னைத் துயில் இடை நீக்கி மீண்டும் மணிமேகலா தெய்வம் உவவனத்திலே புகுந்து அவ்விடத்தே மிக்க துயில் கொண்டிருந்த சுதமதியைத் துயிலுணர்த்தி; அஞ்சல் யான் மணிமேகலை இந்நகர் இந்திரகோடணை காண வந்தேன்-சுதமதி அஞ்சாதே கொள்! யான் நும்மோடுறவு கொண்டுள்ள மணிமேகலா தெய்வங்காண்! இப் பூம்புகார் நகரத்தே நிகழாநின்ற இந்திரவிழாக் காண்டற்கு ஈண்டு வந்தேன்! இளங்கொடிக்கு ஆதிசால் முனிவன் அறவழிப்படூஉம் ஏது முதிர்ந்துளது ஆகலின்-இப்பொழுது இளமையுடைய மணிமேகலைக்குப் புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய அறநெறியில் ஒழுகுதற்குக் காரணமான பழவினைத் தொகுதி முதிர்ச்சியுற்றுப் பயனளிக்கும் செவ்வி பெற்றிருத்தலாலே; நின் விளங்கு இழை தன்னை விஞ்சையில் பெயர்த்து ஓர் வஞ்சம் இல் மணிபல்லவத்திடை வைத்தேன்- நின் வளர்ப்பு மகளாகிய மணிமேகலையை என் வித்தையினாலே துயில் கலையாவண்ணம் இவ்விடத்தினின்றும் எடுத்துப் போய் என் காவலிலமைந்தமையின் சிறிதும் வஞ்சச் செயல் நிகழ்தலில்லாத மணிபல்லவம் என்னும் தீவிடத்தே வைத்துள்ளேன்; பண்புற பண்டைப் பிறப்பும் உணர்ந்து-அவள் அவ்விடத்தே நிகழும் தெய்வப் பண்பு எய்துதலாலே அவளுடைய அறிதற்கரிய பழைய பிறப்பின் வரலாற்றையும் உணர்ந்துகொண்டு; ஈங்கு இந்நகர் மருங்கே இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்-இந் நாவலம் பொழிலகத்துள்ளே இப் பூம்புகார் நகரத்தின்கண் இற்றைக்கு ஏழா நாள் வான் வழியாக வந்து தோன்றுவள்; என்க.

(விளக்கம்) உறுதுயில்- மிக்கவுறக்கம். இந்திரகோடணை-இந்திர விழா. மணிமேகலை- மணிமேகலா தெய்வம். ஆதிசான் முனிவன் என்றது கௌதம புத்தரை. ஏது- பழவினை. இளங்கொடி: மணிமேகலை. விஞ்சை- வித்தை. மணிபல்லவத் தீவின்கண் அவட்கு ஏதம் சிறிதும் வரமாட்டா தென்பாள், வஞ்சமில் மணிபல்லவம் என்றாள் ஈங்கு-இந் நாவலந் தீவின்கண். நகர்-புகார் நகரம். உரையாய்- கூறுவாயாக; அவள் என்திறம் உணரும்- அம் மாதவி என் பெயர் கேட்கு மளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை நாமம் செய்த நல் நாள்- மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதலியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க.

இதுவுமது

25-35: மடக்கொடி......நன்னாள்

(இதன் பொருள்) மடக்கொடி நல்லாள் களிப்புமாண் காவல் பேரூர் ஒளித்துரு எய்தினும் உன் திறம் ஒளியாள்-மடப்பமுடைய பூங்கொடி போலும் அழகுடைய அம் மணிமேகலை களித்து வாழ்தற்குப் பெரிதும் மாட்சிமையுடைய செல்வச் செழிப்பும் காவலும் அமைந்த தலைநகரமாகிய இப் பூம்புகாருக்கு அவள் மீண்டும் வரும்போது தனக்குரிய வுண்மையுருவத்தோடு வாராமல் வேற்றுருக் கொண்டே வருவள் காண்! அவ்வாறு அவள் வேற்றுருவில் வந்து ஈண்டுக் கரந்துவருவாளாயினும் தன்னை உனக்கு மறையாமல் உன் திறத்திலே தன்னை வெளிப்படுத்திக் காட்டுவள்; ஆங்கு அவள் இந்நகர் புகுந்த அந்நாள் ஈங்கு நிகழ்வன ஏதும் பலவுள-அவ்வாறு அவள் வேற்றுருவத்தோடு இம்மாநகர் புகுந்த அக்காலத்தே இங்கே நிகழ்விருக்கின்ற பழவினை நிகழ்ச்சிகள் பற்பல உள அவை நிகழுங்காண்!; நீ மாதவி தனக்கு யான் வந்த வண்ணமும் மகள் ஏதம் இல் நெறி எய்திய வண்ணமும்- நங்காய்! இவை நிற்க! இனி நீ போய் மாதவியைக் காண்புழி, யான் இந்நகரத்திற்கு வந்த செய்தியையும் என் வாயிலாய் அவள் அருமை மகளாகிய மணிமேகலை குற்றமில்லாத நன்னெறியிலே சென்றுள்ள செய்தியையும்; உரையாய்-கூறுவாயாக; அவள் என்திறம் உணரும் அம்மாதவி என் பெயர் கேட்குமளவிலேயே என்னை இன்னார் என்று உணர்ந்து கொள்ளுவள், எங்ஙனமெனின்; கோவலன் திரை இரும் பௌவத்துத் தெய்வம் ஒன்று உண்டு எனக் கூறிக் கொடியிடை தன்னை என் நாமம் செய்த நல் நாள்-மணிமேகலையின் தந்தையாகிய கோவலன் அலையெறியும் பெரிய கடலிடத்தே எங்குலதெய்வம் ஒன்றுளது என்று என் வரலாற்றை மாதவி முதியோர்க்கு எடுத்துச் சொல்லித் தன் குழவியாகிய அவட்கு மணிமேகலை என்னும் என் பெயரையே சூட்டிய அந்த நல்ல நாளில்; என்க.

(விளக்கம்) நல்லாள்: மணிமேகலை. களிப்பு- ஈண்டு வாழ்க்கையின்பம் என்னும் பொருட்டு. பேரூர்- தலைநகரமாகிய பூம்புகார். ஒளித்துரு- வேற்றுருவம். உன்திறம்-உனக்கு. ஆங்கு-அவ்வாறு. அந்நாள் என்றது அக்காலத்தே என்பதுபட நின்றது. ஏது நிகழ்ச்சி- பழவினை விளைவுகள். தெய்வமாகலின் எதிர்காலத்து நிகழ்ச்சிகளாகிய உதயகுமரன் கொலையுண்ணல் முதலியவற்றைக் கருதி ஏதுநிகழ்ச்சி பலவுள என்று கூறுகின்றது. யான் வந்த வண்ணம் என்றது மணிமேகலா தெய்வமாகிய யான் வந்த வண்ணமும் என்பதுபட நின்றது.

இனி, சுதமதி, மாதவி இத்தெய்வத்தை அறியாளாகலின் தெய்வத்தால் எடுத்துப் போகப்பட்ட தன் மகட்கு என்னுறுமோ? என்று அஞ்சுதல் இயல்பாதல் பற்றிச் சொல்லாது விடுவாளாதலின், அத் தெய்வம் என்பெயர் கேட்குமளவிலேயே மாதவி என்னை அறிந்து கொள்வாள். மேலும் தன் மகட்கு ஏதம் சிறிதும் நிகழமாட்டாதென்று ஆறுதலும் அடைகுவள்; ஆதலால் நீ இவற்றை அஞ்சாது அவட்குக் கூறுக என்று தெளிவித்தற் பொருட்டு இக் கருத்தெல்லாம் அடங்க அவள் என்றிறம் உணரும் என்று கூறும் நுணுக்கம் உணர்க. பின்னும் அவள் அறிந்தமை எவ்வாறு என்னும் ஐயம் சுதமதிக்குப் பிறக்கு மாகலின் அவ்வையம் அகற்றுதற்கு அவ் வரலாற்றையும் அறிவித்தல் வேண்டிற்று.

மணிமேகலைக்குப் பெயர் சூட்டிய நாளில் கோவலன் எங்குல தெய்வம் ஒன்றுளது, அதன் பெயரையே இக் குழவிக் கிடுக என்று என் பெயரை இடுவித்த பொழுது என் வரலாற்றையும் மாதவி முதலியோர்க்குக் கூறினன்; இவ்வாற்றால் மாதவி என்னை அறிகுவள் என்றவாறு.

இனி, ஈண்டுக் கூறும் இச் செய்தியை

மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து
வாலா மைந்நா ணீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுது மென்று
தாமின் புறாஉந் தகைமொழி கேட்டாங்
கிடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல்
உடைகலப் பட்ட வெங்கோன் முன்னாள்
புண்ணிய தானம் புரிந்தோ னாகலின்
நண்ணுவழி யின்றி நாள்சில நீந்த
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன்
வந்தே னஞ்சன் மணிமே கலையான்
உன்பெருந் தானத் துறுதி யொழியாது
துன்ப நீங்கித் துயர்க்கடல் ஒழிகென
விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த
எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென
அணிமே கலையார் ஆயிரங் கணிகையர்
மணிமே கலைஎன வாழ்த்திய ஞான்று
மங்கல மடந்தை மாதவி தன்னோடு
செம்பொன் மாரி செங்கையிற் பொழிய
...........................கருணை மறவ!

எனவரும் சிலப்பதிகாரத்து. அடைக்கலக் காதையில்(22-53) மாடல மறையோன் கூற்றானும் உணர்க.

மாதவிக்கு யான் நேரிலே தோன்றியும் உவகை கூறியுளேன்; ஆதலின் அவள் அறிகுவள் என்று அத் தெய்வம் கூறுதல்

35-40: நள்ளிருள்.........போயபின்

(இதன் பொருள்) நள் இருள் கனவு அகத்தே நனவு போல- செறிந்த இருளையுடைய இடையாமத்தே துயிலிலாழ்ந்திருந்த அம் மாதவியின் கனவிலே நனவிலே தோன்றுமாறு போல அவள் நன்குணர்ந்து கொள்ளும்படி உருவங் கொண்டு தோன்றி; காமன் கை அறக் கடுநவை அறுக்கும் மாபெருந் தவக்கொடி ஈன்றனை என்றே உரைத்தேன்- நங்காய்! காம வேளின் குறும்பு தன்பாற் செல்லாமையாலே கையறவு கொள்ளும்படி பெருந் துன்பத்திற் கெல்லாம் பிறப்பிடமாகிய பிறவிப் பிணியை அறுத்தொழிக்கும் மிகப் பெரிய நோன்புகளாகிய நறுமண மலர்களைப் பூத்தற் கியன்றதொரு தெய்வப்பூங்கொடியையே நீ பெற்றுள்ளனை நீடூழி வாழ்க! என்று அவளை வாழ்த்தியுமிருக்கின்றேன்; ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று-ஈங்கு இப்பொழுது கூறுகின்ற இந் நிகழ்ச்சியையும் நீ ஆங்கு அவள்பாற் சென்று கூறக்கடவை என்று சுதமதிக்குப் பணித்து; அருந்தெய்வம் ஆங்கு அந்தரத்து எழுந்து போனபின்-காண்டற்கரிய அம் மணிமேகலா தெய்வம் அப்பொழுதே அவள் கட்புலங் காண விசும்பிலே எழுந்து மறைந்து போனபின்பு; என்க.

(விளக்கம்) நள்ளிருள்-என்றது மாதவி துயிலில் ஆழ்ந்திருந்த இடையாமம் என்பதுபட நின்றது. காமன் கையற என்றது-காமன் தன் செயலில் இவள்பால் தோல்வியுற்று வருந்த என்பதுபட நின்றது. இனி இவள் துறவுபூணுவதால் தன் வெற்றிக்கு இனி இவள் துணையாகாள் என்று காமன் கையறவு கொண்டான் என்பது மொன்று. கடுநவை என்றது பிறப்பினை. நோன்பாகிய மலர்களை மலரும் பூங்கொடி போல்வாள் என்க.

எழுபிறப்புந் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்    (குறள்-92)

என்பதும்,

தம்மிற் றம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது   (குறள்-68)

என்பதும் கருதி மாதவி மகிழுமாற்றால் மணிமேகலா தெய்வம் அத்தகு மகவினைப் பெற்றாய் எனப் பாராட்டற் பொருட்டு மாபெருந்தவக் கொடியீன்றனை என ஓகை கூறினேன் என்று சுதமதிக்குக் கூறிய படியாம். கனவிற் பெரும்பாலன விழிப்புற்ற பின்னர்த் தெளிவாகத் தோன்றா அத்தகைய கனவன்று, அவள் நெஞ்சில் அழியாது பதிவுற்றிருக்கும் கனவு என்பது தோன்ற நனவே போலக் கனவகத் துரைத்தேன் என்றது. யான் ஈங்குக் கூறிய இந் நிகழ்ச்சியை நான் கூறியவாறே கூறிக் காட்டுக என்பதற்கு ஈங்கிவ் வண்ணம் ஆங்கவட்குரை என்று பணித்தது எனலுமாம்.

சுதமதி துயரொடு சக்கரவாளக் கோட்டம் புகப்போதலும் புகார் நகரத்து நள்ளிரவு வண்ணனையும்

(42 ஆம் அடி முதலாக 86 ஆம் அடி முடியுந்துணையும் நள்ளிரவின் வண்ணனையாய் ஒரு தொடர்)

41-49: வெந்துயர்........ திரியவும்

(இதன் பொருள்) சுதமதி வெம்துயர் எய்தி ஆங்கு எழுந்து- சுதமதி மணிமேகலையின் பிரிவாற்றாமையாலுண்டான வெவ்விய துன்பத்தை எய்தி அம் மலர்பொழிலின்கண் அவ்விடத்தினின்றும் எழுந்து செல்பவள்; அகல் மனை அரங்கத்து ஆசிரியர் தம்மொடு வகை தெரி மாக்கட்கு வட்டணை காட்டி- அகன்ற தமதில்லத்திலே இயற்றப்பட்ட ஆடலரங்கத்திலே அக் கலைப் பயிற்சி செய்விக்கும் இயலாசிரியனும் ஆடலாசிரியனும் யாழாசிரியனும் குழலோனும் தண்ணுமையோனுமாகிய ஆசிரியரோடிருந்து ஆடற்கலையின் வகைகளைப் பயின்று கொள்ளும் மக்கட்கு வட்டணை முதலிய அவிநய வகைகளை யெல்லாம் செய்து காட்டி ஆடல்புணர்க்கும் அரங்கு இயல் மகளிரின்-ஆடல்கலையைப் பயிற்றுவிக்கின்ற அரங்கத்தே ஆடும் மகளிர் அத் தொழிலை நிறுத்திக் கண் முகிழ்த்துயிலுதல் போன்றே; கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று-அவ்வாடன் மகளிரோடு கூடி முழங்கிய, குழல் முதலிய குயிலுவக் கருவிகளும் தத்தம் கண்ணவிந்து வாளாது கிடப்பவும்; பண்ணுக்கிளை பயிரும் பண் யாழ்த் தீந்தொடை கொளைவல் ஆயமோடு இசை கூட்டு உண்டுபண்களையும் திறன்களையும் நன்கிசைக்கின்ற பண்ணுறுத்தப் பட்ட இனிய ஒலிகளையுடைய நரம்புகளை வருடிப் பண்பாடுதலில் வல்ல மகளிரோடே கூடியிருந்து யாழிசையும் மிடற்றுப் பாடலும் பிறவும் ஆகிய இசையின்பங்களை இனிது நுகர்ந்து பின்னர்; விளைசேர் செங்கை மெல்விரல் உதைத்த வெம்மை வெய்து உறாது தன்மையில் திரியவும்-துயில் மயக்கத்தால் மகளிர் வளைமணிந்த சிவந்த தம்முடைய கைவிரலாலே மெல்லென வருடிய நரம்புகள் வெப்பம் வேண்டுமளவு வெய்தாக உறாமையாலே தளர்ந்து அவற்றிலெழும் இசை தன் தன்மையில் பிறழா நிற்பவும் என்க.

(விளக்கம்) ஆசிரியர்-ஆடற்கலைக் கின்றியமையாத குழலாசிரியர் முதலியோர். வட்டணை- வர்த்தனை; கமலவர்த்தனை. அஃதாவது கைத்தலங் காட்டல். இதனை,  தோற்பொலி முழவும் யாழுந் துளைபயில் குழலு மேங்கக் காற்கொசி கொம்புபோலப் போந்து கைத்தலங்கள் காட்டி எனவரும் சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வலக் கால் முன் மிதித்தேறி வலத்தூணைச் சேர்ந்து கைத்தலங் காட்டுதல் கமலவர்த்தனை என்னும் விளக்கவுரையானு முணர்க. மாக்களை என்பதற்கு முதனீண்டதெனக் கொண்டு தம்மக்கட்கு எனக் கொள்க. ஆடற்கலையைக் கற்பிக்கும் மகளிர் என்க. குயிலுவக் கருவி குழல் முதலிய இசைக் கருவிகள். இதனை கூடிய குயிலுவக்  கருவிக ளெல்லாம் குழல் வழி நின்ற தியாழே யாழ் வழித் தண்ணுமை நின்றதுதகவே, தண்ணுமைப் பின் வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை என்பதனானுமுணர்க. (சிலப். 3:138-142) பண்ணும் கிளையும் என்க. கிளை- திறம். கொளை- பண். துயில் மயக்கத்தாலே மெல்விரலால் மெல்ல வருடலின் நரம்பில் வெப்பம் வெய்தாக உறதாக ஒலி தன்மையில் திரியவும் என்க.

இதுவுமது

50-59: பண்பில்...... வதியவும்

(இதன் பொருள்) பண்பு இல் காதலன் பரத்தமை நோனாது- தமது பாடறிந்தொழுகும் பண்பற்றவராகிய தம் காதலர் பரத்தையரோடு கூடியொழுகும் ஒழுக்கத்தைப் பொறாத குலமகளிர்; உண் கண் சிவந்து-அவர்பா லெழுந்த சினத்தாலே தம்மையுண்ட கண்கள் சிவக்கப் பெற்று; தெருட்டவும் தெருளாது ஊடலொடு துயில்வோர்- தம் கணவர் தம் பள்ளியிடத்தே வந்து தமது குற்றமின்மையைக் கூறி ஊடலுணர்த்தா நிற்பவும் ஊடல் தீராதாராய்ப் பொய்த்துயில் கொள்பவர்; விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும்- தம் சினத்திற்கஞ்சி மணமலர் பரப்பிய அப் பள்ளியிலே ஒரு புறத்தே கிடக்கின்ற தம்மால் விரும்பப்படும் அக் காதலரைத் துயில் மயக்கத்தாலே தழுவுவார் போலத் தழுவிக் கொள்ளவும் என்க.

(விளக்கம்) காதலன் பரத்தமை நோனாது துயில்வோர் என்றது ஒருமைப் பன்மைமயக்கம். இதனை, அஃதை தந்தை அண்ணல் யானை அடுபோர்ச் செழியர் என்புழிப் போலக் கொள்க.

ஊடலொடு பொய்த்துயில் கொள்வோர், தம் ஆற்றாமையால் தம்மருகே அஞ்சிக் கிடக்கும் காதலரைத் துயில் மயக்கத்தாலே தம்மையறியாது தழுவுவார் போலத் தழுவவும் என்க. என்னை? குலமகளிர்க்குத் தங்காதலர் பரத்தைமை நோனாது கடிந்தொழுகல் கூடாமையான் இங்ஙனம் உபாயத்தால் தழுவினர் என்க. இதனை.

சேக்கை இனியார்பாற் செல்வான் மனையாளால்
காக்கை கடிந்தொழுகல் கூடுமோ கூடா

எனவரும் பரிபாடலினுங் காண்க.(பரி-20-86-7)

இதுவுமது

54-63: தளர்நடை.......நடுநாள்

(இதன் பொருள்) தளர் நடை ஆயிமொடு தங்காது ஓடி விளையாடு சிறு தேர் ஈர்த்து- தளர்த்த நடையையுடைய சிறாஅர் கூட்டத்தோடு கூடி ஓரிடத்தும் தங்கி இளைப்பாறுதலின்றி ஓடுதலைச் செய்து தாம் விளையாடுதற்கியன்ற சிறிய தேர்களை இழுத்து; மெய் வருந்தி-உடல் வருந்தி; அமளித்துஞ்சும் ஐம்படைத்தாலிக்குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்கு- அவ் வருத்தம் தீரப் பஞ்சணைமிசை ஆழ்ந்து துயில்கொண்டுள்ள ஐம்படைத்தாலி என்னும் பிள்ளைப் பணி பூண்டுள்ள மழலை பேசுகின்ற சிவந்த வாயையும் குறுகுறு நடக்கும் நடையையுமுடைய மக்களுக்கு; காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்கு துயில் வதியவும்- செவிலித் தாயர் ஐயவியைத் தூவி அகிற்புகை காட்டிய பின்னர் அவர் பக்கலிலே தாமும் மிக்க துயிலிலே ஆழ்ந்து கிடப்பவும்; இறை உறை புறவும் நிறை நீர்ப்புள்ளும் காஉறை பறவையும்-இல்லிறப்பிலே தங்குகின்ற புறாக்களும் நிறைந்த நீர் நிலைகளிலே மலரின் மேலுறைகின்ற பறவைகளும் பொழிலிலே உறைகின்ற பறவைகளும்; நாஉள் அழுந்தி- தத்தம் நா அலகினாடே அழுந்தி ஓலியவிந்துறங்கியிருப்பவும்; விழவுக்களி அடங்கி முழவுக்கண் துயின்று பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்- விழாவின் மகிழ்ச்சியாரவாரமும் அடங்கி முழவு முதலிய இசைக்கருவிகளும் தம் கண்களில் ஒலியெழாது அவிந்து கிடப்பவும் பழைதாகிய வெற்றியையுடைய முதுமையுடைய அப் பூம்புகார் நகரமே இவ்வாறு பள்ளி கொண்டிருக்கின்ற இரவின் நடுயாமத்தே என்க.

(விளக்கம்) தளர்நடை ஆயம் என்றது இளஞ்சிறாஅர் கூட்டத்தை அவர் ஆடும் பொழுது இளைப்பாற வேண்டும் என்று கருதி ஓரிடத்தும் தங்கியிருத்தலில்லை, இஃதவரியல்பு ஆகலின் தங்காது ஓடி என்றார்.

தேரில் ஏறி யின்புறுதற்கு மாறாக இவர் தேரினை ஈர்த்தலிலேயே பேரின்பம் எய்துவர், விளையாட்டினாலே மெய்வருந்திய வருத்தம் தீர இவர் பள்ளியில் ஆழ்ந்து துயிலுவர். இவர்க்குக் காவற் பெண்டிர் எறிந்து காட்டிப் பின் தாமும் துயில என்க. காவற் பெண்டிர்-செவிலித்தாயர். தூங்குதுயில்- மிக்கதுயில். கடிப்பகை-ஐயவி; வெண்சிறு கடுகு. ஐம்படைத்தாலி- திருமாலின் சங்கு முதலிய ஐந்து படைகளையும் பொன்னாற் செய்து கோத்ததொரு பிள்ளைப்பணி திருமால் காவற் கடவுளாதலின் மக்களைக் காத்தற் பொருட்டு அணிவது இவ் வைம்படைத்தாலி என்க.

இறை-இறப்பு. புறவு- புறா, நீர்ப்புள்-நீரில் வாழுமியல்புடைய பறவைகள். பறவைகள் துயிலுங் காலத்தே மிகவும் ஆழ்ந்து துயல்வன ஆதலின் அவ்வியல்பு தோன்ற நாவுள்ளழுந்தி என்றார். அழுந்தித் துயிலவும் அடங்கித் துயின்றும் மூதூர் பாயல்கொள் நடுநாள் என்க.

நள்ளிரவில் அந் நகரத்துள் நிகழும் நிகழ்ச்சிகள்

64-76: கோமகன்......அரவமும்

(இதன் பொருள்) கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்- சோழமன்னனுடைய அரண்மனையின்கண் நாழிகை வட்டிலின் உதவியாலே; யாமங் கொள்பவர் ஏத்தொலியரவமும்- பொழுதினை அளந்து காணும் கணிமாக்கள் அரசனை வாழ்த்தும் பாடலோடு தாங்கண்ட பொழுதினை நகரத்துள்ளார்க்கு அறிவிக்கின்ற அரச வாழ்த்துப் பாடலாலெழுகின்ற ஒலியும்; உறையுள் நின்று ஒடுங்கிய உண்ணா உயக்கத்து நிறை அழியானை நெடுங் கூவிளியும் கட்டப்பட்டிருக்கின்ற கொட்டிலினூடேயே நின்று கவளமும் கொள்ளாமையாலுண்டான மெய் வருத்தத்தோடே காம மிகுதியாலே நெஞ்சத்தின்கண் நிறையழிந்து யானைகள் தத்தம் காதற்றுணையைக் கருதி நீளிதாகப் பிளிறாநின்ற பிளிற்றொலியும்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும்- தேரோடுதற்குரிய பெருந் தெருக்களிடத்தும் சிறிய வழியாகிய முடுக்குகளிடத்துள்; ஊர் காப்பாளர் எறி துடியோதையும்- நகரங்காக்கும் காவன் மறவர் முழக்கும் துடியும் முழக்கமும்; முழங்கு நீர் முன் துறைக் கலம்புணர் கம்மியர்- ஆரவாரிக்கின்ற கடற்றுறையிடத்தே மரக்கலம் இயைக்கின்ற கம்மத் தொழிலாளர்; துழந்து அடுகள்ளின் தோப்பியுண்டு அயர்ந்து பழஞ் செருக்கு உற்ற அனந்தல் பாணியும்- தம்மிலத்திலேயே துழாவிச் சமைத்த நெல்லாலியன்ற கள்ளைப் பருகித் தம்மை மறந்து முதிர்ந்த செருக்குடனே அக் கள் மயக்கத்தூடே பாடுகின்ற பாடலோசையும்; அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை விரவிய மகளிர் ஏந்திய தூமத்து அரம் போன்ற வாயினையுடைய வேப்பிலையாகிய பேய்ப் பகையினையும் வெண்சிறு கடுகாகிய பேய்ப்பகையினையும் விரவியிட்ட தூபக்காலை மகளிர் கையிலேந்திய புகையினோடும் வந்து; புதல்வரைப் பயந்து புனிறுதீர் கயக்கம் தீர்வினை மகளிர்- மகவீன்றமையால் வாலாமையுடைய அணுமைக் காலம் தீர்ந்து தாயாராகிய மகளிர் ஈனுதலாலெய்திய கயக்கத்தை நீராடுதலாலே தீர்க்கின்ற தொழிலையுடைய குலமகளிர்; குளன் ஆடு அரவமும்- பிறர் தம்மை நோக்காமைப் பொருட்டு அவ்விடையிருள் யாமத்தே குளத்தின்கண் நீராடுதலாலே எழுகின்ற ஒலியும் என்க.

(விளக்கம்) கோமகன்: சோழமன்னன். கோயில்-அரண்மனை குறுநீர்க் கன்னல் -காலத்தை அளந்து காண்டற்குரியதொரு கருவி. அஃதாவது ஒரு வட்டிலின்கண் நீரை நிரப்பி அதன் அடியில் மிகச்சிறியதொரு துளையமைத்து அத் துளை வழியாக நீர் வடியும் பொழுதினை நொடி நாழிகை முதலிய காலக் கூறுபாடாக அறிதற்கு வரையிட்டுப் பொழுதினை அளந்து காண்டல். இதனை.

பொழுதளந் தறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் செலீஇய செல்வோய்நின்
குறிநீர்க் கன்னல் இனைத்தென் றிசைப்ப

எனவரும் முல்லைப் பாட்டானும்(55-58) அறிக.

யாமங் கொள்பவர்- நாழிகைக் கணக்கர். அவர் அரசனுக்குச் சென்று நாழிகைக்குக் கவி சொல்லுவார் எனவும்,

பூமென் கணையும் பொருசிலையும் கைக்கொண்டு
காமன் திரியும் கருவூரா- யாமங்கள்
ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
ஒன்றுபோ யொன்றுபோய் ஒன்று

என்றோர் எடுத்துக் காட்டும் தந்தனர் அடியார்க்கு நல்லார் (சிலப்-5: 49-உரை விளக்கம்)

உறையுள்-யானைக் கொட்டில். காமக்குணம் மேலிட்டிருத்தலால் கவளங் கொள்ளாது உடம்பு மெலிந்து வருந்தும்யானை நிறையழியானை எனத் தனித்தனி கூட்டுக.

துடி-ஒருவகைத் தோற் கருவி. கலம் புணர் கம்மியர் என்றது மரக்கலஞ் செய்யும் கம்மாளரை. இனி மரக்கலத்தில் சேர்ந்து தொழில் செய்வோருமாம். துழந்தடுதல்-துடுப்பினாலே துழாவிச் சமைத்தல். தோப்பி- நெல்லாற் சமைத்த ஒருவகைக் கள் இல்லடுகள்ளின் தோப்பி பருகி எனவரும் பெரும்பாணாற்றுப் படையும் நோக்குக(142). செருக்கு-ஈண்டுக் கள்ளினா லெய்திய வெறி. அது தானும் நெடுங்காலமாகப் பயின்று முதிர்ந்த வெறி யென்பார், பழஞ்செருக்கு என்றார். அணந்தர்-மயக்கம். எனவே வாய்தந்தன பாடும் பாட்டு என்க. பாணி- பாட்டு. அரவாய்- வேப்பிலை: அன்மொழித்தொகை. ஐயவி வெண்சிறு கடுகு. கடிப்பகை- பேய்ப்பகை. அஃதாவது பேய் அஞ்சி யகலுதற்குக் காரணமாதலின் அதற்குப் பகையாகிய பொருள் என்றவாறு. புனிற்று மகளிராதலின்  இருவகைக் காப்பும் வேண்டிற்று. கயக்கம் என்றது மகப்பேற்றால் உண்டான பொலிவழிவினை.

மகவீன்ற சில நாளில் அக் கயக்கம் தீர்தற்கு நீராடி ஒப்பனை செய்தற்கேற்றதாக உடம்பு சீர்படும் அன்றோ, அத்தகைய செவ்வியைப் புனிறு தீர்ந்த செவ்வியாகக் கேடல் மரபு. அங்ஙனஞ் செவ்வியுறுதற்கு ஒன்பது நாட்கள் வேண்டும். பத்தா நாளிரவிற் சென்று குளிர்ந்த நீரினாடி வாலாமை கழிப்பர் எனக் கூறும் நூல் உளது என்பர் அறிஞர் இவ்வாறு நீராடும் வழக்கத்தை

கணவ ருவப்பப் புதல்வர்ப் பயந்து
பணைத்தேந் திளமுலை யமுத மூறப்
புலவுப்புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீ ரயர

எனவரும் மதுரைக் காஞ்சியானும் (600-603) உணர்க. குளன்: போலி

இதுவுமது

77-87: வலித்த....கலங்கி

(இதன் பொருள்) வலத்த நெஞ்சின் ஆடவர் அன்றியும்- தம்முள் ஒருவரோடொருவர் பகை கொண்டு கறுவு கொண்ட நெஞ்சினையுடைய பகை மறவர் யாருமில்லாதிருந்தும்; புலிக்கணத்து அன்னோர் பூத சதுக்கத்து-புலிக்கூட்டத்தையே ஒத்தவராகிய அந்நகரத்து மறக்குடிப் பிறந்த போர் வீரர்கள் பூத சதுக்கம் என்னுமிடத்திற்குத் தாமே வந்து; கொடித்தேர் வேந்தன் கொற்றம் கொள்க என- புலிக்கொடி யுயர்த்திய தேரையுடைய நங்கள் சோழ மன்னன் சென்ற போர்தொறும் வென்றியே கொள்வானாக என்று பராவி; இடிக்குரல் முழக்கத்து இடும்பலி ஓதையும்-இடி போன்று முழங்கும் வீர  முரசமுழக்கத்தோடே சதுக்கப்பூதத்திற்குத் தம்முயிரைத் தாமே வழங்குகின்ற ஆரவாரமும்; ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர் கடுஞ்சூல் மகளிர் நெடும்புண் உற்றோர் தம் துயர் கெடுக்கும் மந்திரமாக்கள் மகவீன்ற இளமகளிரும் துன்பம் பொறாத பால்வாய்ச் சிறு குழவிகளும் தலைச் சூல் உற்றிருக்கின்ற மகளிரும் நெடிய புண்பட்டு வருந்துவோரும் ஆகிய இத்தகையோர் பேய் முதலியவற்றானும் பிணியானும் எய்திய துன்பத்தைத் தீர்த்தற் பொருட்டு மந்திரம் பண்ணும் மந்திரவாதியர்; மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென நின்று எறி பலியின் நெடுங்குரல் ஓதையும்-வாகை மன்றத்திலே வதிகின்ற பேய்த்தலைவி வந்து யாம் தருகின்ற ஆடு கோழி முதலியவற்றின் குருதிப் பலியை ஏற்றருள்கவென்று அப் பேயை வண்ணித்துப் பாடிக் கூவி அழைக்கின்ற நெடிய அழைப்பாரவாரமும்; பல்வேறு ஓதையும் பரந்து ஒருங்கு இசைப்பக் கேட்டு உளங் கலங்கி- நரியின் ஊளையும் நாயின் குரைப்பும் ஆகிய இன்னோரன்ன பிற ஆரவாரங்களும் திசையெலாம் பரவி ஒருங்கே கேட்கும் பேராரவாரத்தைக் கேட்டு நெஞ்சம் அச்சத்தாலே கலங்கி; என்க.

(விளக்கம்) பகைவர் இல்லாத காலத்தேயும் மன்னவன் கொற்றம் நாளும் நாளும் உயர்க என்று வீரமறவர் தம் முயிரையே தெய்வத்திற்குப் பலியிடும் வழக்க முண்மையை,

ஆர்த்துக் களங்கொண்டோர் ஆரம ரழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றங் கொள்கென
நற்பலி பீடிகை நலங்கொள வைத்தாங்
குயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரன் முழக்கத்து
மயிர்க்கண் முரசமொடு வான்பலி யூட்டி

எனவரும் சிலப்பதிகாரத்தானும் (5:83-8) உணர்க. இதனை அவிப்பலி என்பர் ஆசிரியர் தொல்காப்பியனார். இது வீரச்சுவை: அவிப்பலி செய்வோர் பலிக்கும் வலிக்கும் தலைவரம்பாயோர் என்னும் மாபெரும் புகழ்க்குரியோர் என்ப.

ஈற்றிளம் பெண்டிர் முதலியோர் பிணி முதலியவற்றிற்கியன்ற
மருந்துண்ணவும் பத்தியங் காக்கவும் வலியற்றவர் ஆவர். இவர்க்கு மனவலியும் இன்மையின் பேயாலே எளிதிற் பற்றப்படுவர். ஆதலின் இவர் துயர் மந்திர மாக்களாலேயே தீர்க்கப்படும்; ஆதலால் இத்தகையோரைத் தனியே வாங்கி எண்ணினர். இச் செயல் தமக்குடன்பாடன்மையின் மந்திர மாக்கள் என்றார். என்னை? உயிர்க் குயிரீதல் மடமை என்பாள் சம்பாபதி

கொலை அறமாமெனும் கொடுங்தொழி லாளர்
அவலப் படிற்றுரை ஆங்கது

என முன்னைக் காதையில் (162-163) அறிவுறுத்துதலும் நினைக.

மன்றம்- வாகைமன்றம். காய்பசிக் கடும்பேய் கணங்கொண்டீண்டு மாமலர் பெருஞ்சினை வாகை மன்றமும் என் முன்னும் கூறினமை (சக்கர. 82-83) நினைக.

நின்றெறி பலி என்றது ஆடு கோழி முதலியவற்றின் குருதியிற் குழைத்த சோற்றினை வானத்தே எறியும் பலி என்றவாறு. இவ்வோசையெல்லாம் சுதமதி கேட்டுக் கலங்கி என்க.

சுதமதி உலக வறவியிற் புகுதல்

87-93: ஊட்டிருள்.......இருத்தலும்

(இதன் பொருள்) முருந்து ஏர் இளநகை ஊட்டு இருள் அழுவத்து பூம்பொழில் நீங்கி-முருந்து போன்ற கூர்த்த வெள்ளிய பற்களையுடைய அச் சுதமதியானவள் காரரக்கின் குழம்பினை ஊட்டினாற் போன்று பெரிதும் இருண்டுகிடக்கும் பரம்பினையுடைய அந்த உவவனமாகிய பூம்பொழிலினின்றும் நீங்கி; திருந்து குடபால் எயில் சிறுபுழை போகி-அழகிய மேற்றிசைமதலி னமைந்த சிறிய வாயிலிற் புகுந்து சென்று; மிக்க மா தெய்வம் வியந்து எடுத்து  உரைத்த சக்கரவாளத்து ஆங்கண்- மிகவும் சிறந்த அருளுடைய பெரிய மணிமேகலா தெய்வம் வியந்து எடுத்துக் கூறிய சக்கரவாளக் கோட்டத்தே ஆங்கோரிடத்தே; பலர் புகத்திறந்த பகுவாய் வாயில்- வருவோர் பலரும் புகுதற் பொருட்டுத் திறந்தே கிடக்கின்ற பிளந்தவாய் போன்ற வாயிலிற் புகுந்து; உலக வறவியின் ஒருபுடை இருந்தாலும்-உலக வறவி என்னும் ஊரம் பலத்தே ஒரு பக்கத்திலே அமர்ந்திருத்தலும்; என்க.

(விளக்கம்) அருளுடைமைபற்றி மணிமேகலா தெய்வத்தை மிக்க மா தெய்வம் என்றார். பகுவாய்- பிளந்த வாய். வாய் போன்ற வாயில் என்க. உலகவறவி-பூம்புகார் நகரத்துப் பெரியதோர் ஊரம்பலம். அஃதுலகத்துள்ள மாந்தர்க் கெல்லாம் பொதுவிடம் என்பது புலப்பட அதற்கு அப் பெயர் இடப்பட்ட தென்க.

கந்தற்பாவை சுதமதியை விளித்தல்

94-105: கந்துடை........கேளாய்

(இதன் பொருள்) நெடுநிலை உடைக் கந்து அந்தில்- நெடிதாக நிற்கும் நிலையினையுடைய தூணாகிய அவ்விடத்தே; காரணம் காட்டிய எழுதிய அற்புதப் பாவை- பண்டு மயன் என்பான் வருபவர் பிறப்பிற்குக் காரணமாகிய அவருடைய முற்பிறப்பு முதலியவற்றை அறிவித்தற் பொருட்டியற்றிய வியத்தகு படிமத்திலே உறைகின்ற தெய்வம் ஒன்று; மைத்தடங் கண்ணாள் மயங்கியருள் வெருவ- அச் சுதமதி பின்னும் அவ்விருளில் மயங்கி அஞ்சும்படி; திப்பியம் உரைக்கும் தெய்வக்கிளவியின்-இறந்த கால எதிர்கால நிகழ்ச்சிகளைக் கூறுகின்ற தெய்வத்தன்மையுடைய தனக்குரிய தெய்வ மொழியாலே பேசத் தொடங்கி; இரவி வன்மன் ஒரு பெருமகளே துரகத்தானைத் துச்சயன் தேவி- இரவி வன்மன் என்பவனுடைய ஒப்பற்ற பெருமையுடைய மகளே! குதிரைப்படை மிக்க துச்சயன் என்பவனுடைய மனைவியே! தயங்கு இணர்கோதை தாரை சாவு உற- விளங்குகின்ற மலர் மாலையணிந்த நின் தமக்கையாகிய தாரை என்பாள் பொறுக்ககில்லாது இறந்தொழியும்படி; மயங்கி யானை முன் மன்னுயிர் நீத்தோய்- மயக்கமுற்று யானை முன் சென்று நிலைபெற்ற உயிரை விட்டவளே!; காராளர் சண்பையில் கௌசிகன் மகளே- காராளர் மிக்கு வாழ்கின்ற சண்பை மாநகரத்தேயுறையும் கௌசிகன் என்னும் பார்ப்பனன் மகளே! மாருத வேகனொடு இந்நகர் புகுந்து தாரை தன்னொடு கூடிய வீரையாகிய சுதமதி கேளாய்- மாருதவேகன் என்னும் விச்சாதரன் கைப்பற்றின்மையாலே அவனோடு இப் பூம்புகார் நகரத்தே வந்து தாரையாகிய நின் தமக்கை மாதவியோடு கூடி யுறைகின்ற வீரையாகிய சுதமதியே! ஈதொன்று கேட்பாயாக! (என்று விளித்து முன்னிலைப்படுத்தி) என்க.

(விளக்கம்) நெடுநிலை உடைக்கந்து அந்தில் என மாறிக் கூட்டுக. காரணம்-இப் பிறப்பிற்குக் காரணமான பழம்பிறப்பு. காட்டிய: செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்; காட்ட என்க.மயன் எழுதிய பாவை, அற்புதப் பாவை எனத் தனித்தனி கூட்டுக. மைத்தடங் கண்ணாள் என்றது சுதமதி என்னும் பெயராந்துணை. மயங்கி வெருவ என்க. திப்பியம்- தெய்வத் தன்மையான செய்தி. அஃதாவது, பழம்பிறப் புணர்த்துதல் எதிரது கூறல் முதலியன. தெய்வக்கிளவி- தெய்வத்திற் கியன்ற மொழி. அஃதாவது வாயாற் கூறாமல் வானொலி மாத்திரையாகவே கூறுதல்.

இரவிவன்மன்- அசோதர நகரத்து அரசன். சுதமதியின் முற் பிறப்பில் அவட்குத் தந்தையானவன்.

துச்சயன்- சுதமதியின் முற்பிறப்பிற் கணவனாயிருந்தவன். இவன் கச்சய நகரத்து மன்னன்.

தாரை- சுதமதியின் முற்பிறப்பிலே அவளுக்குத் தமக்கையாயிருந்தவள். வீரை என முற்பிறப்பிற் பெயர் பெற்றிருந்த சுதமதி, யானை யாலறையுண் டிறந்தாள்; அது பொறாமல் தாரை தானே உயிர் விட்டாள் என்பது கருத்து.

சண்பை- சீகாழி. அங்க  நாட்டிலுள்ள சம்பா நகரம் என்பாருமுளர். மயங்கி- கள்ளால் மயங்கி என்பதுபட நின்றது. தாரை மறுபிறப்பில் மாதவியாகப் பிறந்தாள்; வீரையாகிய நீ சுதமதியாகப் பிறந்து அவளோடு கூடினை என்றறிவித்தபடியாம்.

இனி, அன்புக் கேண்மை கொண்டு வாழ்பவர் இம்மை மாறி மறுமை எய்திய விடத்தும் மீண்டும் கூடி அவ்வன்பினை வளர்த்துக் கொள்வார் என்பது பௌத்த சமயத்தினர் கோட்பாடாதல் பெற்றாம். ஆசிரியர் இளங்கோவும் இக்கொள்கையை யுடையர் என்பதனைச் சிலப்பதிகாரத்து (30) வரந்தரு காதையின் நிகழ்ச்சிகளால் அறியலாம். மேலும் அவர்

நற்றிறம் புரிந்தோர் பொற்படி யெய்தலும்
அற்புளஞ் சிறந்தோர் பற்றுவழிச் சேறலும்

என்றோதியதற்கு ஈண்டுத் தாரையும் வீரையுமாகிய அற்புளஞ் சிறந்த உடன் பிறந்த மகளிரிருவரும், மறுபிறப்பில் மாதவியும் சுதமதியும் வேறு இடங்களினும் குடிகளினும் பிறந்திருந்தும் பற்றுவழி மீண்டும் கூடியது சிறந்த எடுத்துக் காட்டாதலும் அறிக.

இதுவுமது

104-110: இன்றேழ்.......... நல்லாள்

(இதன் பொருள்) இன்று ஏழ் நாளில் இடை இருள் யாமத்து- இற்றைக்கு ஏழாநாளின் இரவின் இருள் செறிந்த இடையாமத்திலே; இலக்குமியாகிய நினக்கு இளையாள் தன் பிறப்பதனொடு நின்பிறப்பு உணர்ந்து ஈங்கு வரும்- முற்பிறப்பிலே இலக்குமி என்னும் பெயரோடிருந்த நின் தங்கை தன் முற்பிறப்பினையும் உன்னுடைய முற்பிறப்பினையும் அறிந்துகொண்டு இந் நகரத்திற்கு வருவாள் காண்!; அஞ்சல் என்று உரைத்தது அவ் உரை கேட்டு- ஆதலால் நீ அஞ்சாதே கொள்! என்று அக் கந்திற் பாவை தன் தெய்வக் கிளவியாலே தெரிந்துக் கூறியதாக அந்த மொழிகளைக் கேட்டு; நெஞ்சம் நடுங்குறூஉம் நேரிழைநல்லாள்- அச்சத்தால் தன்னுள்ளம் நடுங்குகின்ற அச் சுதமதி நல்லாள்; என்க.

(விளக்கம்) இடையிருள் யாமம்- நள்ளிரவு. இலக்குமி என்றது மணிமேகலையின் முற்பிறப்பின்கண் அவட்கெய்திய பெயரை. இதனால் மாதவியும் சுதமதியும் மணிமேகலையும் பிறப்பிலே நிரலே தாரையும் வீரையும் இலக்குமியும் என்னும் பெயர்களையுடைய ஒரு தாய்வயிற்றுடன்பிறந்த மகளிராயிருந்தனர் என்பது பெற்றாம். தெய்வம் கூறிற்றேனும் அது தெய்வமொழியாதல் பற்றியும் மகளிர் இயல்பு பற்றியும் சுதமதிக்கு அச்சமே பிறந்தது. என்னை?

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்
பிணங்கல் சாலா அச்சம் நான்கே    (மெய்-8)

எனவரும் தொல்காப்பியம் அணங்கும் அச்சம் பிறத்தற்கு நிலைக்களமாம் எனக் கூறுதலும் நினைக. அணங்கு- தெய்வம். நேரிழை நல்லாள் என்றது வாளாது சுதமதி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.

(111 ஆம் அடிமுதலாக 124 ஆம் அடிமுடிய வைகறைப் பொழுதின் வண்ணனையாய் ஒரு தொடர்)

பூம்புகாரில் வைகறை யாமத்து நிகழ்ச்சிகள்

111-124: காவலாளர்..........பரந்தெழ

(இதன் பொருள்) காவலாளர் கண்துயில் கொள்ள- இரவெல்லாம் துயிலின்றி நகரங்காத்த காவற் றொழிலாளர் கண் மூடித் துயிலா நிற்பவும்; தூமென் சேக்கைத் துயில் கண் விழிப்ப-தூய மெல்லிய பஞ்சணையிற் றுயின்று கொண்டிருந்த காதலர்கள் கண்கள் துயிலுணர்ந்து விழித்துக் கொள்ளவும்; வலம்புரிச் சங்கம் வறிது எழுந்து ஆர்ப்ப- வலம்புரிச் சங்கங்கள் பொருளின்றி மங்கலமாக ஆரவாரிப்பவும்; புலம்புரிச்சங்கம் பொருளொடு முழங்க அறிவை விரும்புகின்ற புலவர் கூட்டம் கடவுள் வாழ்த்தாகிய பொருளோடு பாடி முழங்கா நிற்பவும்; புகர்முக வாரணம் நெடுங்கூ விளிப்ப-புள்ளிகளையுடைய முகத்தையுடைய யானைகள் தம்மைக் குளிர் நீராட்டும் பாகரை நெடிதாகக் கூவிப் பிளிறவும்; பொறி மயிர் வாரணம் குறுங்கூ விளிப்ப- புள்ளி பொருந்திய மயிரையுடைய கோழிச் சேவல்கள் குறிய கூவுதலாலே கதிர்வரவியம்பா நிற்பவும்; பணைநிலைப் புரவி பல எழுந்து ஆல- பந்தியிற் கட்டப் பெற்று நிற்றலையுடைய பலப்பலவாகிய குதிரைகளும் அந் நிலையை வெறுத்து நிலை யெர்ந்து கனையா நிற்பவும்; பணைநிலைப் புள்ளும் பல எழுந்து ஆல- மரக்கிளைகளிலே உறக்கத்தே நிலை பெற்ற காக்கை முதலிய பறவைகளும் எழுந்து ஆரவாரிப்பவும்; பூம்பொழில் ஆர்கை புள்ளொலி சிறப்ப- மலர்ப் பொழில்களினூடே நிறைந்துள்ள பறவைகளின் பாட்டொலி மிகா நிற்பவும்; பூங்கொடியார் கை புள்ளொலி சிறப்ப- மலர்க் கொடி போன்ற மகளிரின் கையிலணிந்த வளையல்களின் ஒலியும் மிகா நிற்பவும்; கடவுள் பீடிகை பூப்பலி கடைகொள்-இரவில் விழாக் கொள்ளும் கடவுளர்க்குப் பலிபீடங்களிலே மலர்ப்பலியிட்டு விழாவை முடிவு செய்யா நிற்பவும்; கலம்பகர் பீடிகை கடை பூம்பலி கடை கொள்-அணிகலம் விற்கும் அங்காடித் தெருவில் கடைகளெல்லாம் முற்றத்தே மலர்ப்பலி கொள்ளா நிற்பவும்; குயிலுவர் கடைதொறும் பண்இயம் பரந்து எழ-இசைக்கருவியாளர் உறையுமிடமெல்லாம் பண்ணிசையும் கருவியிசையும் பரவி எழாநிற்பவும்; கொடுப்போர் கடைதொறும் பண்ணியம் சிற்றுண்டி செய்து கொடுப்போர் கடைதோறும் சிற்றுண்டிகள்; பரந்து எழ- பரவுதல் செய்து மிகா நிற்பவும்; என்க.

(விளக்கம்) காவலளார்-ஊர்காப்பாளர்; தேர் வழங்கு தெருவும் சிற்றிடை முடுக்கரும் ஊர்காப்பாளர் எறிதுடி யோதையும் என இக் காதையில்(68-69) முன்னும் கூறப்பட்டமை யுணர்க. சேக்கைத் துயில்கண் என்றது காதலர் கண்களை துயில்வோர் விரைப் பூம்பள்ளி வீழ்துணை தழுவவும் என முன்னும்(52-53) கூறப்பட்டமை உணர்க. வலம்புரிச்சங்கம்- சங்குகளிற் சிறந்தது. இது மங்கலச் சங்கு புலம்-அறிவு. புகர்முக வாரணம்-யானை. பொறிமயிர் வாரணம்- சேவல். பொழில் ஆர்கை- பொழிலில் நிறைதலையுடைய. பூங்கொடியார் கைப்புள் என்றது-வளையலை. மாதர் இல்லத்தே தொழிலில் முனைதலின் வளைகள் மிக்கொலித்தன என்றவாறு. இனி, பூங்கொடியில் தாதுண்ணும் அறுகாற் சிறு பறவையின் இசையொலி எனினுமாம்.

கலம்பகர் பீடிகை-அணிகலம் விற்கும் அங்காடித் தெரு. கடை- அங்காடித் தெருவிலுள்ள பல்வேறு கடைகளும் என்க. கடை வாயிலில் வைகறையில் பூவிடுதங் மரபு.

குயிலுவர்-இசைக் கருவி குயிலுவோர். கூடிய குயிலுவக் கருவி கண் துயின்று என முன்னும் வந்தமை யறிக. பண்ணியம்- தின் பண்டங்கள். கொடுப்போர்- செய்து கொடுப்போர். இவர் உணவு விற்போர் என்க.

சுதமதி மாதவியைக் கண்டு மணிமேகலையைப் பற்றிக் கூறுதலும்; இருவர் நிலைமையும்

125-134:ஊர்துயில்.........தானென்

(இதன் பொருள்) ஊர் துயில் எடுப்ப-இவ்வாறு அம் மூதூரில் வாழ்வாரையெல்லாம் உறக்கத்தினின்றும் எழுப்புதற்கு; உரவு நீர் அழுவத்துக் கார் இருள் சீத்துக் கதிரவன் முளைத்தலும் வலிமைமிக்க நீர்ப்பரப்பாகிய குணகடலினின்றும் கரிய இருளைத் துரந்து கதிரவன் தோன்றா நிற்பவும்(சுதமதி நல்லாள்) ஏ உறு மஞ்ஞையின் இனைந்து-அம்பேறுண்ட மயில் போன்று பெரிதும் உளம் வருந்தித் தன் மெல்லடிகள் வருந்துமாறு, மாநகர் வீதி மருங்கின் போகி-அப் பூம்புகார் நகரத்து வீதி வழியாக நடந்து சென்று; போய கங்குலிற் புகுந்ததை யெல்லாம் கழிந்த இரவிலே நிகழ்ந்த நிகழ்ச்சிகளை யெல்லாம்; மாதவி தனக்கு வழுவின்று உரைத்தலும்- மாதவிக்குச் சிறிதும் பிறழாமல் கூறியதனாலே; அவள் நல் மணி இழந்த நாகம் போன்று தன் மகள் வாராத் தனித்துயர் உழப்ப-அம் மாதவிதானும் தான் உமிழ்ந்த அழகிய மணியை இழந்துவிட்ட நாகப் பாம்பு போன்று தன் மகளாகிய மணிமேகலை மீண்டு வாராமையாலே எழுந்த மாபெருந்துன்பத்திலே அழுந்தா நிற்ப; துன்னியது உரைத்த சுதமதி- மணிமேகலைக்கு நிகழ்ந்ததனை மாதவிக்குக் கூறிய அச் சுதமதி தானும்; இன் உயிர் இழந்த யாக்கையின் இருந்தனள்- தனக்கினிய உயிரையே இழந்தொழிந்த உடம்புபோல இருப்பாளாயினள்; என்பதாம்.

(விளக்கம்) உரவுநீர்-கடல். ஆக்கல் அளித்தல் அழித்தல் என்னும் மூன்று பேராற்றலும் உடையதாகலின் அதற்கது பெயராயிற்று. உரவு-ஆற்றல். அழுவம்-பரப்பு. ஏ-அம்பு. இனைதல்-வருந்துதல். இஃது உள்ளத்தின்கண் எய்திய துயரத்திற்குவமை ஆதலின் அடிவருத்தத்தை வேறு கூறினர். போய கங்குல்-கழிந்த இரவு. எல்லாம்- எஞ்சாமைப் பொருட்டு. வழு-குற்றம்; ஈண்டுப் பிறழ்ச்சி. வாராத் துயர் என்புழி பெயரெச்சத் தீறு கெட்டது. தனித் துயர்- பெருந்துன்பம். சுதமதிதானும் எனல் வேண்டிய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

இனி இக்காதையை- மணிமேகலையை மணிபல்லவத்திடை மணிமேகலா தெய்வம் வைத்து நீங்கி உதயகுமரன் இருந்தோன் முன்னர்த் தோன்றி மகனே! கோல் திரிந்திடின் கோள் திரியும் கோள் திரிந்திடின் வறங்கூறும் கூரின் உயிர் இல்லை. உயிர் வேந்தன் உயிர் என்னும் தகுதி இன்றாகும். அவத்திறம் ஒழிகென உரைத்தபின் சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி அஞ்சல், மணிமேகலை யான், ஏது முதிர்ந்தது, இளங்கொடிக்கு; ஆதலின் பெயர்த்து வைத்தேன் இன்று ஏழ் நாளில் வந்து தோன்றும்.  ஒளியாள் ஈங்கு நிகழ்வன பலவுள. மாதவிக்கு உரையாய்! என்திறம் உணரும்! கனவகத்துரைத்தேன் உரை எனப் போயபின், சுதமதி எழுந்து கேட்டுக் கலங்கிப் போகி ஒரு புடை இருத்தலும், பாவை கிளவியின் மகளே! தேவி நீத்தோய், சுதமதி கேளாய் இளையாள் வரும் அஞ்சல் என்றுரைத்த உரை கேட்டு, நல்லாள் கதிரவன் முளைத்தலும் வருந்தப் போகி மாதவிக்கு உரைத்தலும், அவள் உழப்ப, சுதமதி இருந்தனள் என இயைத்துக் கொள்க.

துயிலெழுப்பிய காதை முற்றிற்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !