ஆர்.கே.பேட்டை பிரதோஷ தரிசனத்துடன் விடுமுறை நிறைவு
ஆர்.கே.பேட்டை: ஒன்றரை மாத கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் கொண்டாடிய மாணவர்கள், நேற்று மாலை, சிவாலயங்களில் பிரதோஷ தரிசனத்துடன் நிறைவு செய்தனர். புதிய கல்வியாண்டை, இன்று, புத்துணர்வுடன் துவங்குகின்றனர்.
ஒன்றரை மாதமாக கோடை விடுமுறையை பயனுள்ள முறையில், சுற்றுலா, கோடை கால பயிற்சி, விவசாயம், நெசவு உள்ளிட்ட கைத்தொழில் பழகுதல் என, பயனுள்ள முறையில்
கழித்த மாணவர்கள், நேற்று மாலை, சிவாலயங்களில் நடைபெற்ற பிரதோஷ அபிஷேகத்தை காண திரளாக கூடியிருந்தனர்.
அபிஷேக தரிசனத்துடன் விடுமுறையை நிறைவு செய்தவர்கள், இன்று துவங்கும் பதிய கல்வியாண்டை புத்துணர்வுடன் துவங்குகின்றனர்.
ஆர்.கே.பேட்டை அடுத்த, மட்டவளம் ஆனந்தவள்ளி உடனுறை கோவத்ச நாதேஸ்வரர் கோவிலில், நேற்று, மாலை 4:00 மணியளவில், பிரதோஷ அபிஷேகம் துவங்கியது. நந்தியம்
பெருமானுக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம் என, பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில், சுவாமி அருள்பாலித்தார். பின், பிரதோஷநாதர் உள் புறப்பாடு எழுந்தருளினார். இதில், அம்மையார்குப்பம், மட்டவளம், ஜனகராஜகுப்பம், கம்பாளையம், ராசபாளையம், பாலசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர். இதேபோல், காந்தகிரி அன்னபூரணி உடனுறை அகத்தீஸ்வரர் மலைக்கோவில், வங்கனூர் வியாசேஸ்வரர் மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகம் நடந்தது.