கோயில்களுக்கு அரிசி, கேழ்வரகு வழங்குங்க... வேப்பிலை மாலையுடன் கலெக்டரிடம் முறையீடு
விருதுநகர்: அம்மனை வழிபடும் இந்து சமுதாய மக்களுக்காக ஆடிமாதத்தில் கோயில்களில் கூழ் ஊற்ற கம்பு, கேழ்வரகு, அரிசி வழங்க கோரி, இந்து மக்கள் கட்சியினர் வேப்பிலை மாலை அணிந்து கலெக்டரிடம் முறையிட்டனர். அவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட மனுவில், “விருதுநகர், கன்னியாகுமரி, துத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபடும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கடந்த 30 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இங்கு உழவாரப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்தி தர வேண்டும்.
இஸ்லாமியர்களுக்கு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி ஊற்றுவதற்கு அரசு சார்பாக 4,500 மெட்ரிக் டன் அளவில் இலவசமாக அரிசி வாசல்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போல் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றும் விழா சிறப்பாக நடைபெறும். பெரும்பான்மையான இந்து சமுதாய மக்கள் வழிபடும் அம்மன் கோயில்களுக்கு, அரசு சார்பில் அரிசி, கம்பு, கேழ்வரகு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும், என, குறிப்பிட்டுள்ளனர்.