நன்மைக்கு பயன்படுத்துங்கள்!
இன்டர்நெட், மொபைல் இன்னும் பல நவீனசாதனங்கள் மக்களுக்கு நன்மை தருவதற்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றை சமூக விரோத செயல்களுக்கு பயன் படுத்துபவர்கள் அதிகமாகி விட்டனர். இவர்களுக்கெல்லாம் என்ன கதி கிடைக்கும் தெரியுமா?சுக்கிரனுக்கு சிவனை நேரில் தரிசிக்க ஆசை ஏற்பட்டது. லிங்கபிரதிஷ்டை செய்து பல காலம் பூஜித்து வந்தார். சிவனும் நேரில் வந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அரிய சஞ்சீவினி மந்திரத்தை உபதேசித்தார். இதையறிந்த அசுரர்கள், சுக்கிரனை தங்கள்குருவாக ஏற்றுக் கொண்டார்கள். பெற்ற வரம் மூலம், அசுர வம்சம் அதிகரிப்பதற்கு சுக்கிரன் உதவினார். ஒருசமயம் தேவர்கள் அசுரர்களை கொன்று குவித்தனர். ஆனாலும் பலனில்லை. இறந்தஅசுரர்களை எல்லாம் சுக்கிரன் உயிர் பிழைக்கச் செய்து கொண்டிருந்தார். பயந்து போன தேவர்கள், சுக்கிரனுக்கு வரம் தந்த சிவனிடம் முறையிட்டனர். சிவன் சுக்கிரனை விழுங்கி விட்டார். பின்பு தேவர்கள், அசுரர்களை வென்றனர். பெற்ற வரத்தை தவறாகப் பயன்படுத்தியதால் வந்த வினையை பார்த்தீர்களா! ஒரு சாதனம் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும். நன்மைக்கு பயன்படுத்திக் கொண்டால் நாம் வளரலாம். தீமைக்கு பயன்படுத்தினால் நாமும் அழிவோம். அந்த சாதனமும் அழிந்து போகும்.