செப்பறை தாமிரசபை கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்
திருநெல்வேலி: செப்பறை கோயிலில் ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. திருநெல்வேலியை அடுத்துள்ள ராஜவல்லிபுரத்தில் தாமிரபரணிக்கரையில் செப்பறை அழகியகூத்தர் பிரான் கோயில் அமைந்துள்ளது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் தாமிரசபையாக இந்த கோயில் பிரசித்திபெற்றது.இங்குள்ள கோயிலின் மேற்கூரை செப்புதகடுகளால் வேயப்பட்டுள்ளதால் செப்பறை கோயில் எனப்பெயர் பெற்றது.சிதம்பரம் கோயிலில் விழா நடக்கும் அதே நாட்களில் செப்பறை கோயிலிலும் விழா நடப்பது சிறப்புக்குறியதாகும். இங்கு ஆனித்தேரோட்டத்திற்கான கொடியேற்றம் கடந்த 21ம் தேதியன்று நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிசேகம் நடந்தன. நேற்று உருகுசட்டசேவையும், இரவில் சிகப்பு சாத்தி தரிசனமும் நடந்தது. இன்று ஆனித்தேரோட்டம் விமரிசையாக நடந்தது. காலை 11 மணிக்கு திருத்தேரில் அழகியகூத்தர் எழுந்தருளினார். பகல் 11.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றிற்கு வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த தேரோட்டத்தைபிரமிப்பாக பார்த்தனர். அவர்களும் தேர் வீதிகளில் நடந்து பங்கேற்றனர்.