உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்

தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சிவரூபமான நடராஜருக்கு ஆண்டுக்கு, ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். இதில், முக்கிய விழாவாக மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில், கார்த்திகை தீப மை பிரசாதம் நடராஜருக்கு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் நடராஜருக்கு திருமஞ்சனம் சாத்தப்பட்டு, நடராஜர் சமேத சிவகாம சுந்தரி அம்மன் ஆயிரங்கால் மண்டபத்தில், எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடக்கும்.

இன்று  திருமஞ்சனம் சாத்தும் விழாவை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், நடராஜர் சமேத சிவகாமசுந்தரி ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக சுவாமி, அம்மன் வெளியே வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !