சூரியனார்கோவில் சிவசூரியபெருமானுக்கு மஹாபிஷேகம் கோலாகலம்!
கும்பகோணம்: சூரியனார்கோவிலில் உள்ள உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு நடந்த மஹாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையை அடுத்த சூரியனார் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. நவக்கிரகங்களுக்கென அமையப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. இவ்வாலயத்தில் தமிழ் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை உற்சவர் உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரியபெருமானுக்கு மஹாபிஷேகம் நடப்பது வழக்கம்.அதன்படி, நேற்று ஐப்பசி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலை 10.30 மணிக்கு மூலவர் சன்னதி எதிரில் கடங்கள் அமைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து 12 மணிக்கு மூலவர் சன்னதிக்கு பின்னே அமைந்துள்ள மண்டபத்தில் உற்சவர் உஷாதேவி, சாயாதேவி உடனாய சிவசூரிய பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் துவங்கி நடந்தது.திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிறப்பு ஹோமத்துக்கு முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை வேதபாடசாலை மாணவர்கள் வேதங்களை முழங்கினர். ஹோமங்கள் நடந்த இடத்திலிருந்து கடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின் உற்சவருக்கு கட அபிஷேகம் நடந்தது. உற்சவர் சிவசூரியபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.