தொடர் விடுமுறை: கோயில்களில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தொடர் விடுமுறையால் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆக.,13 முதல் 15 தேதி வரை 3 நாள்கள் அரசு விடுமுறையால் அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகம், வட மாநில சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் 3 ஆயிரத்துக்கு மேலான கார், வேனில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடியில் குவிந்தனர்.
நேற்று காலை முதல் குவிந்த பக்தர்கள், கோயில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடலில் சுற்றுலா பயணிகள் விபரீதம் தெரியாமல் உற்சாகமாக குளித்தனர். திடீரென குவிந்த சுற்றுலா பயணிகளால் ராமேஸ்வரத்தில் அனைத்து லாட்ஜிலும் அறையும் முன்பதிவு ஆனதால், சில பயணிகள் ரூம் கிடைக்காமல் தவித்தனர். மேலும் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்ட் முதல் தனுஷ்கோடி தேசிய சாலை இருபுறமும் நிறுத்திய வாகனங்களை போலீசார் ஒழுங்குபடுத்த முடியாமல் திணறியதால், ராமேஸ்வரத்தில் பல மணி நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாணத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்ததால் காலை 10:00 மணிக்கு மேல் நவபாஷாணத்தில் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால் இப்பகுதியில் வெப்பம் தணிதந்தது. மேலும் நேற்று, இன்று, நாளை தொடர் விடுமுறை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் நவபாஷாணத்தில் அதிகளவில் குவிந்தனர். இவர்களுக்கு தேவையான வசதிகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.