வத்திராயிருப்பு வீரகாளியம்மன் கோயில் விழா
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு வெள்ளாளர் நடுத்தெரு பகுதி வீரகாளியம்மன் கோயிலில் உற்ஸவ விழா நடந்தது. முதல்நாள் காப்புக்கட்டுடன் விழா துவங்கியது. விரதமிருந்த பக்தர்கள் கோயிலில் காப்புக்கட்டிக்கொண்டனர். இரவு அம்மன் கரகம் எடுப்பதற்காக மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று உற்ஸவ அம்மனை உருவாக்கி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பெண்கள் அம்மனுக்கு பூக்களை துாவியும், பக்தர்களுக்கு பாதபூஜைகள் செய்தும் அம்மனை வரவேற்று கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளச் செய்தனர். இரண்டாம் நாளில் பெண்கள் கோயிலுக்கு முன்பாக பொங்கலிட்டு வழிபட்டனர். மாலையில் பொதுப்பொங்கல் வழிபாடு , மஞ்சள் நீராட்டு , பெண்களின் கும்மி வழிபாடு நடந்தது. இறுதி நிகழ்ச்சியாக அம்மன் கரகம் கரைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. பக்தர்கள் பூக்களை துாவி வழிபட்டனர். கார்கார்த்தார் உறவின்முறை செயலாளர் கிருஷ்ணன், தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.