மெக்காவுக்கு புனித பயணம்: 20 லட்சம் பேர் குவிந்தனர்
ஜெட்டா: சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில், புனித கடமையை நிறைவேற்றுவதற்காக, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குவிந்துள்ளனர். உலகம் முழுவதும் வசிக்கும் முஸ்லிம்கள், வாழ்நாளில் ஒரு முறையேனும், ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது, அவர்களது ஐந்து புனித கடமைகளில் ஒன்று. இதற்காக, மேற்காசிய நாடான, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு, ஆண்டுதோறும், லட்சக்கணக்கானோர் புனித பயணம் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு, பக்ரீத் பண்டிகை, விரைவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்காக, மெக்கா நகரில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் குவிந்துள்ளனர். பல நாடுகளில் இருந்து வந்துள்ள அவர்கள், மெக்காவை சுற்றி பல்வேறு இடங்களில் தங்கி உள்ளனர். உலகின் அதிகளவு முஸ்லிம்கள் வசிக்கும் நாடான, இந்தோனேஷியாவில் இருந்து, ஏராளமானோர் வருகை தந்துள்ளனர்.
அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை, சவுதி அரேபிய அரசு செய்துள்ளது; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கடந்த, 2015ல், ஹஜ் பயணத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததால், தற்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. ஹஜ் பயணம் வந்துள்ளவர்கள், சிரமமின்றி, தங்கள் கடமைகளை செய்ய வசதியாக, ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக, சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது. ஹஜ் விபத்தை காரணம் காட்டி, 2016ல், புனித பயணத்தை புறக்கணித்த, ஈரான் நாட்டினர், இந்த ஆண்டு வழக்கம் போல், புனித ஹஜ் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.