விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் குலச்சிறைய நாயனார் குரு பூஜை விழா
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், குலச்சிறைய நாயனார் குருபூஜை நேற்று நடைபெற்றது. பாண்டிய மன்னரிடம், முதன்மை அமைச்சராக பணியாற்றியவர், மணமேற்குடியை சேர்ந்த குலச்சிறைய நாயனார். சிவநாமம் கூறுவதையும், திருத்தொண்டு புரிவதையும், சிவனடியார்களுக்கு உணவு, உடை கொடுத்து உபசரிப்பதையுமே, தமது கடமையாக கொண்டிருந்தார். ஒருமுறை, திருஞான சம்பந்தர், பாண்டிய நாட்டுக்கு வந்தார்; அவரை அழைத்து வந்து, மன்னர் உபசரித்தார். சமணர் மடத்துக்கு தீ வைத்ததால், மன்னனை வெப்பு நோய் தாக்கியிருந்தது. மன்னரின் நோய் தீர்க்க, திருஞான சம்பந்தரை, அரண்மனைக்கு அழைத்து சென்று, சைவத்தின் பெருமையை உணர செய்து, சிவாலயங்களுக்கு வழிபட, குலச்சிறைய நாயனார் அழைத்து சென்றார். அத்தகைய சைவம் வளர்த்த குலச்சிறைய நாயனார் குருபூஜை, நேற்று ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், அர்த்த சாமபூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நேற்று நடந்தது. இதையொட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.