நவராத்திரி பவனிக்கு கேரள அரசு வரவேற்பு
நாகர்கோவில்: பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு, நேற்று மதியம் மாநில எல்லையான களியக்காவிளையில், கேரள அரசு சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், வரவேற்பு கொடுக்கப்பட்டது.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக, மன்னர் கால மரபுப்படி, கன்னியாகுமரி மாவட்டம், பத்மானபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக எடுத்து செல்லப்படுகின்றன. நாளை துவங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக நேற்று முன்தினம் காலையில், பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட பவனி, நேற்று மதியம் மாநில எல்லையான களியக்காவிளையில் வந்தது. அப்போது கேரள அரசு சார்பில், பவனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேரள போலீசாரின் பேண்டு வாத்தியம் முழங்க, போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின், குமரி மாவட்ட இந்து அறநிலைய துறை அதிகாரிகள், முறைப்படி கேரள அரசு அதிகாரிகளிடம் பவனி பொறுப்பை ஒப்படைத்தனர். இன்று இந்த பவனி, திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலுக்கு, வந்ததும், திருவிதாங்கூர் மன்னர் பவனியை வரவேற்று வாளை பெற்றுக் கொள்வார்; 21ம் தேதி நவராத்திரி பூஜை துவங்கும்.