எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
எல்லா செயல்களிலும் பொதுநலன் இருக்க வேண்டும். எல்லா பொருட்களும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். வழிபாட்டைக் கூட தனக்கென இல்லாமல் எல்லாருக்குமாக செய்ய வேண்டும். இப்படி செய்தால், யாரையும் ஒதுக்கி வைக்கும் நிலை வராது. உடலுக்கு உயிர் ஒன்றே. அதுபோல, உலகுக்கு கடவுள் ஒருவரே. பல தெய்வங்கள் இருப்பதாகக் கூறுபவர்கள் ஆன்மிகம் பற்றி அறியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும். தெய்வங்களின் பெயரை சொல்லி மிருகங்களை பலியிடக்கூடாது. மாமிசம் உண்ணும் மக்களைப் பார்த்து நான் உள்ளம் கலங்குகிறேன். பிற உயிர்களைக் காப்பாற்றும் ஜீவ காருண்யத்தை கடைபிடித்தால் தான், கடவுளின் அருளைப் பெற முடியும். பசியினால் ஏழைகள் பலரும் தூங்காமல் உழலுகின்றனர். அவர்களுக்கு உணவளித்து, அவர்களையும் நிம்மதியாக தூங்க வையுங்கள். உடலைக் கெடுப்பது உணவு, பெண் பழக்கம், தூக்கம், பயம்... இந்த நான்கில் பெண் பழக்கமே மிகுந்த கேட்டை விளைவிக்கும். இறைவனின் திருவடிகளை ஒருமித்த மனதுடன் வணங்குங்கள். உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றுமாய் பேசுபவர்களிடம் பழக்கம் கொள்ளாதீர்கள். சொல்கிறார் வள்ளலார்