மூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி கோயிலில் நாளை திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி
திருநெல்வேலி : மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்டகணபதி கோயிலில் திருப்பணி விரைவாக நடந்தேற வேண்டி நாளை (டிச.14ம் தேதி) திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் உச்சிஷ்டகணபதி கோயில் அமைந்துள்ளது. ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் விநாயகர், கையில் அம்பாளுடன் ஒரே கல்லில் மிக பிரமாண்டமாக மூலவராக எழுந்தருளியுள்ளார். இக்கோயில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயிலாகவும் போற்றப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று இக்கோயிலில் சூரிய ஒளி, விநாயகர் மீது விழும் அதிசயம் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகிறது. அதாவது சித்திரை வருடப்பிறப்பன்று சூரிய பகவான், விநாயகரை வணங்குவதாக ஐதீகம் என பக்தர்கள் கூறுகின்றனர். இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக ரூ.54 லட்சம் செலவில் பல்வேறு திருப்பணி மற்றும் பராமரிப்பு வேலைகள் நடந்துவருகின்றன. திருப்பணி வேலைகள் விரைவாக நடந்தேறி கும்பாபிஷேகம் நடைபெறவேண்டி திருவுரு மாமலை திருவாசகம் முற்றோதுதல் குழு, சைவ நெறிக்கழகம் சார்பில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நாளை (14ம் தேதி) காலை முதல் மாலை வரை நடக்கிறது.