27 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவி.,ஆண்டாள் கோவிலில் அத்தாளபூஜை மீண்டும் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: 27 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்கோவிலில் அத்தாளபூஜை நேற்று முதல் மீண்டும் துவங்கியது. 108 வைணவ தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் தினமும் ஆறுகால பூஜைகள் பல வருடங்களாக நடந்தது. ஆனால், கடந்த 1990 க்கு பிறகு இரவு 8 மணிக்கு நடக்கும் அத்தாளபூஜை நிறுத்தபட்டது. எனவே, மீண்டும் அத்தாளபூஜை நடத்தவேண்டும் என்பது ஆண்டாள் பக்தர்களின் கோரிக்கையாக எழுந்தது.இதுகுறித்து கடந்த 2017 செப் 15 தேதிய தினமலரில், ஆண்டாள்கோயிலில் நைவேத்தியம் நிறுத்தம், படி அளக்கும் அன்னை பட்டினி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியது. அதற்கு பிறகுதான் அத்தாளபூஜை நிறுத்தபட்டிருக்கிறது என்பது அறநிலையத்துறையின் கவனத்திற்கு தெரியவந்து, மீண்டும் அத்தாளபூஜையை நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.
இதனையடுத்து 27 வருடங்களுக்கு பிறகு நேற்று முதல் ஆண்டாள் கோவிலில் அத்தாளபூஜை துவங்கியது. நேற்றிரவு 7.45 மணியளவில் நித்யஉற்சவராகிய பெருமாள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க கோவிலின் உட்பிரகாரத்தில் வலம்வந்து மகாபலி சாதிக்கபட்டது. இதனை முன்னிட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு ராஜீபட்டர் சிறப்பு பூஜைகளை செய்தார். இந்நிகழ்ச்சியில் தக்கார் ரவிசந்திரன் மற்றும் பட்டர்கள், கோவில் அலுவலர்கள் பங்கேற்றனர். இதனால் 27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அத்தாளபூஜை துவங்கியிருப்பது ஆண்டாள் பக்தர்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மிகுந்த சந்தோசம்: தினமலர் செய்தி எதிரொலியாக 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்டாள் கோவிலில் அத்தாளபூஜை மீண்டும் துவங்கியது மிகுந்த சந்தோசத்தையும், மனநிறைவையும் ஏற்படுத்தியுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.