மேல்மலையனூர் அங்களம்மன் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் தரிசனம்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு தை அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை செய்தனர். இரவு 11.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளியதும், கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூரதீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். கோவில் பூசாரிகளும், பக்தர்களும் அம்மன் பக்தி பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். சென்னை, வேலூர், புதுச்சேரி, கடலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்களை இயக்கினர்.