திருக்கோவிலூர் தென்பெண்ணையில் தீர்த்தவாரி திருவிழா
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிறவிபிணி போக்கி, உள்ளத்தை துாய்மை படுத்திக் கொள்ளவும், அடுத்த பிறவியில் வீடின்பம் பெறவும் புனித நதியாக விளங்குவது தென்பெண்ணையாறு. திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில்‚ நேற்று நடந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கீழையூர் வீரட்டானேஸ்வரர், அரகண்டநல்லுார் அதுல்யநாதேஸ்வரர், ஏரிக்கரை மூலை இரட்டை விநாயகர்‚ வீரப்பாண்டி அதுல்யநாதேஸ்வரர் சுவாமிகள் தாரை தப்பட்டை முழங்க காலை 9:00 மணிக்கு‚ ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தனித்தனியாக அமைக்கப் பட்டிருந்த பந்தலில் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரியில் திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றில் மக்கள் கூட்டம் அலை மோதியது.