சேலம் சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம்
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று விடப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுந்து மகிழ்ந்தனர். சேலத்தில், பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், வைகாசி விசாகத்தின் போது திருத்தேர் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பயன்பாட்டில் இருந்த தேர் பழுதானதால், தேர்த்திருவிழா நடத்தப்படவில்லை. இந்நிலையில், 45 லட்சம் ரூபாய் செலவில், கோவில் வளாகத்தில் தேர் செய்யப்பட்டு வந்தது. பணி நிறைவு பெற்றதையடுத்து, நேற்று வெள்ளோட்டம் விடப்பட்டது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜை நடந்தது. 5:45 மணிக்கு தேருக்கு கும்பாபி ?ஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 7:00 மணிக்கு, கோவிலில் இருந்து புதிய தேரை, சுகவனேஸ்வரர்-சொர்ணாம்பிகை சுவாமி ஊர்வலத்துடன், திருவள்ளுவர் சிலை, கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக, ராஜ கணபதி கோவில் அருகில் உள்ள தேரடிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். பின்னர், சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அங்கிருந்து புறப்பட்ட தேர், இரண்டாவது அக்ரஹாரம், பட்டைகோவில், சின்னமாரியம்மன் கோவில், சின்னக்கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வழியாக, மீண்டும் தேரடிக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரக்கணக்கானோர், வடம் பிடித்து இழுத்தனர்.