உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனக்குறை போக்கும் கோதவாடி மாரியம்மன்

மனக்குறை போக்கும் கோதவாடி மாரியம்மன்

பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவில், 1922ம் ஆண்டில், செல்வாக்குமிக்கவராக இருந்த அகத்தியப்பர், ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் கோதவாடி மாரியம்மன் கோவிலை கட்டினார். செட்டிக்காபாளையம் செல்லும் ரோட்டில் வடக்கு திசைநோக்கி அமைந்துள்ள கோவிலின் உள்பகுதியில், சிற்ப வேலைப்பாடுகளுடன் செதுக்கப்பட்ட கல்துாண்கள், கருங்கற்கலால் அடுக்கப்பட்ட மேற்கூரை கோவிலின் பழமையை பறைசாற்றுகிறது.கோவிலை சுற்றிலும் ஆளுயர சுற்றுச்சுவர், கோவிலுக்கு வெளியே அம்மனுக்கு நேர் எதிரே கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலினுள், கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்துக்குள் வலது மூலையில் தீர்த்தக்கிணறும், நேர் எதிரே சிம்மவாகனமும் அமைந்துள்ளது. வில்வமரம் தலைவிருட்சமாக உள்ளது.ஆரம்ப காலத்தில் ஒரு அடி உயரமுள்ள கற்சிலை மூலவரை பொதுமக்கள் வணங்கி வந்தனர். கோவில் கும்பாபிேஷகத்தின் போது, மாரியம்மனுக்கு சிலை வடித்து, பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. நுாற்றாண்டு கண்ட இக்கோவிலின் முன்பகுதியில் ஓடு வேய்ந்த மண்டபம் அமைந்துள்ளது. தினமும் காலையில் பால் அபிஷேகம், மதியம் அமுது, மாலையில் சர்க்கரை, பழம் வைத்தும் பூஜை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும், வைகாசி மாதங்களில் வெகு விமர்சையாக கோவில் திருவிழா நடந்து வந்தது. கடந்த, 30 ஆண்டுகளாக திருவிழா நடக்காதது பக்தர்களுக்கு மனக்குறையாக உள்ளது. அதனால், கோவில் வளாகம் களையிழந்து காணப்படுகிறது.கிராமத்தில் நடக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும், கிராம மக்களின் குடும்ப நிகழ்வாக இருந்தாலும், கோவிலில் அம்மனை வழிபட்டு துவங்குகின்றனர். விவசாயம் செழிக்கவும், கால்நடை பெருகவும், தொழில் முன்னேற்றத்துக்கும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து வழிபடுகின்றனர். பக்தர்களின் மனக்குறையை போக்கி அருள்புரியும், கோதவாடி மாரியம்மனை கையெடுத்து வணங்காதவர்கள் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !