உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளையார்கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

காளையார்கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

காளையார்கோவில், காளையார்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் நமச்சிவாயா கோஷத்துடன் தனித்தனி தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். காளையார்கோவிலில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்கு உட்பட்ட ஸ்ரீசொர்ண காளீஸ்வரர் கோயில் உள்ளது.

ஒரே கோயிலில் ஸ்ரீசொர்ண காளீஸ்வரர்- சொர்ண வள்ளி அம்மன், ஸ்ரீசோமேஸ்வரர்- சவுந்திர நாயகி அம்மன், ஸ்ரீ சுந்தரேஸ்வரர்- மீனாட்சியம்மன் ஆகிய 3 சிவன் சன்னதிகளும், 3 அம்மன் சன்னதிகளும் பள்ளியறைகளுடன் இடம் பெற்றிருப்பது இந்தியாவிலேயே இங்கு மட்டுமே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீசொர்ண காளீஸ்வரர் கோயிலில் தைப்பூசத்திருவிழா கடந்த ஜன., 22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் மாலை கோயிலில் தீபாராதனை, சுவாமி வீதிஉலா நடந்து வந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காலை 8 : 55 மணிக்கு துவங்கிய தேரோட்டத்தில் சொர்ண காளீஸ்வரர் பெரிய தேரிலும், சொர்ணவள்ளி அம்மன் சிறிய தேரிலும் வீற்றிருந்தனர். பெரிய தேரை ஆண்களும், சிறிய தேரை பெண்களும் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் இழுத்து வந்தனர். இரண்டு தேர்களும் காலை 10. 15 மணிக்கு நிலையை வந்தடைந்தது. ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவண கணேசன், கோயில் ஸ்தானிகர் காளீஸ்வர குருக்கள், மற்றும் திருக்கானப்பேர் அன்பர்கள் குழு நிர்வாகிகள் செய்திருந்தனர். திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !