உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழாக்களின் நகரம் மதுரை

விழாக்களின் நகரம் மதுரை

தமிழர்களின் வரலாறு, கலை பண்பாட்டுக் கூறுகளின் தலைமையிடமாக இருப்பது மதுரை மாநகரம். இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழை வளர்த்தவர்கள் தமிழ் மக்கள். அவர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்திருப்பது திருவிழாக்கள். மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் பன்னிரெண்டு மாதங்களும் உற்சவங்கள் நிறைந்து விளங்குகின்ற கோயிலாகும்.எனவே மதுரை நகரமும் விழாக்களின் நகரம் என்று போற்றப்படுகிறது. அஷ்டாதச சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் த்வாத சாந்த தலமாகும். கடம்பவனத்தில் முதலில் சுந்தரேஸ்வரருக்கும் பின் மீனாட்சிக்கும் பாண்டிய மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. வைகை ஆற்றை ஒட்டி இந்நகர மக்களின் வாழ்க்கை அமைந்தது. அதற்கேற்ப பல தெருக்கள், படித்துறைத் தெருக்கள் என அழைக்கப்பட்டன. திருமலைராயன் படித்துறைத் தெரு, பேய்ச்சியம்மன் படித்துறைத்தெரு என பல உள்ளன. காரைக்காலம்மையார் தம் இறுதிக் காலத்தில் மதுரை வந்ததாக வரலாறு உண்டு. இங்குள்ள பேய்ச்சிஅம்மன் என்பது காரைக்காலம்மையாரையே குறிக்கும். காரைக்காலம்மையார் பேய் வடிவமெடுத்து இறைவன் அருகில் சென்ற வரலாறு காரணமாக, பேய்ச்சிஅம்மன் என அழைக்கப்பட்டார். இங்ஙனம் தமிழகத்தில் பற்பல வழிபாடுகள் யாவும் மாரியம்மன் வழிபாடு என்ற ஒன்றில் கலந்துவிட்டன.

கண்ணகி கோயில்: மதுரையில் திருமலை மன்னர் அமைத்த தெப்பக்குளம் வித்தியாசமான அமைப்புடையதாகும். அதன் கரையில் அமைந்த மாரியம்மன் கோயில் கண்ணகி கோயிலே என சோமலெ, மதுரை மாவட்டம் என்ற நுாலில் குறிப்பிடுகிறார். கீழவாசல் வழி கண்ணகி கோவலனுடன் மதுரை நகருக்குள் சென்றிருந்தால், அவள் வைகையைக் கடந்து கரை ஏறிய இடம் இக்கோயிலுள்ள இடமாகவே இருக்கும். மேலும் சிலப்பதிகாரத்தில், கண்ணகி மழைத் தெய்வமாகவே வழிபடபட்டதாகத்தான் உரைபெறுகட்டுரை கூறுகிறது. கண்ணகியை வழிபட்டதால் பாண்டிய நாட்டில் பெரும் மழைபெய்தது; வளம் பல பெருகியது. இவற்றால் அன்றே மாரி , மழை மாறி அம்மன், மழைத்தெய்வம் என்று எண்ணும்படி கண்ணகி வழிபாடு மாறியதை அறியலாம்.ஆடித்திங்கள் போஇருள் பக்கத்து அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்றுவெள்ளி வாரத்து ஒள்ளெரி உண்ணஎன்ற சிலம்புப்பகுதி ஆடிவெள்ளியில் ஆறிய கற்புள்ள கண்ணகி, சீறிய கற்புள்ளவளாக மாறி , காளியோ, கொற்கையோ என உலகம் நடுங்குமாறு மதுரையை எரியுண்ணச் செய்தாள் என்று உணர்த்துகிறது. இன்று மதுரை மாரியம்மனுக்கு ஆடி வெள்ளிக்கிழமைகளில் மகளிர் கூட்டம் அலைகடலெனத் திரண்டு வந்து வழிபடுவதை காணும்போது, மதுரை மாரியம்மன் கோயிலைக் கண்ணகி கோயிலே எனக் கருத நிரம்ப இடமுள்ளது.

சித்திரை திருவிழா
: சித்திரைத் திருவிழா மதுரையின் முக்கிய விழா. கோயிலுக்குள் உள்ள அருட்சக்தியை கோயிலுக்குள் சென்று வழிபட இயலாதவர்கள், முடியாதவர்களுக்காக உற்சவ மூர்த்திகள் வடிவில் இறைவனே நேரே வந்து காட்சித் தருவது தான் வீதி உலா. சித்திரை மாதத்தில் சித்திரை வீதியில் முன்பு நடந்த இத்திருவிழா, இப்போது மாசி வீதியில் உலா வருகின்றது. இம்மாற்றத்தை செய்தவர் திருமலைநாயக்கர். திருமலை நாயக்கர் சைவ வைணவ ஒற்றுமையை வலியுறுத்த கள்ளழகர், மீனாட்சி சித்திரைத் திருவிழாவை ஒருங்கிணைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.திருக்கல்யாணத்திற்கு முன்பு மீனாட்சி அம்மை தடாதகைப் பிராட்டியாக முடிபுனைந்து, செங்கோல் ஏந்தும் விழாவும், அதன் பின்னர் மீனாட்சி சுந்தரேசர் திருக்கல்யாணமும் அங்கயற்கண்ணி ஆலயத்தில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகும்.மதுரையில் நடைபெறுகின்ற கோயில் திருவிழாக்களில் மனிதர்களில் ஒற்றுமை பேணப்படுகிறது. 12 மாதங்களும் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு இனத்தார்கள் பங்கு பெறும் மண்டகப் படிகள், இன்றளவும் சமூக ஒற்றுமையை பறைசாற்றி வருகின்றன. எல்லா இனத்தவர்களுக்கும் விழா நடத்துவதில் பங்கேற்பு உள்ளதால் ஒற்றுமையும் ஊரில் நிலவுகிறது. அக்காலத்தில் இருந்தே திருவிழாக்களை நடத்துவதே மக்களின் பணப் பரிமாற்றம் மற்றும் புழக்கத்திற்கும் பேதங்களை மறந்து ஒன்று சேர்வதற்கும் தான்.குறிப்பாக சித்திரை பெருவிழா நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவை காண மக்கள் மாசி வீதிகளில் குழுமி விடுகின்றனர். விழா நாட்களில் தங்களால் இயன்ற தொண்டுகளை செய்வதிலும் மதுரை மக்கள் முனைப்புடன் இருப்பதை காணலாம். உதாரணமாக தண்ணீர் பந்தல் அமைத்தல், உணவுப்பொருட்களை அன்னதானம் செய்தல், பக்தி பனுவல்களை இலவசமாக அச்சிட்டு வழங்கல் என்று பல்வேறு தன்னார்வ பணிகளையும் நகரம் முழுவதும் பார்க்கலாம்.

பெண்களுக்கு மரியாதை: சித்திரை மாதம் பூக்கும் வேப்பம்பூவை அணிந்த மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக நாளில் வலம் வருவது கண் கொள்ளக்காட்சி.சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய நான்கு மாதங்கள் மதுரையில் அம்பாள் ஆட்சி. ஆவணி மாதத்தில் செங்கோல் சொக்கநாதரிடம் வந்துவிடும். எனவே பெண்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் சமூகத்தில் வழங்கிட மதுரை சித்திரைத் திருவிழா துணைசெய்கிறது.ஒன்பதாம் நாள் மீனாட்சி அம்மன் திக்கு விஜயம். அரசர்கள் பலரையும் வென்று அட்டதிக்கு பாலகர்களை முறியடித்த காட்சி நிகழ்த்தப்பெறும். அதன்படி கீழமாசி வீதியில் இந்திரனையும், கீழமாசி தெற்கு மாசி வீதிகளின் சந்திப்பில் அக்னியையும், தெற்கு மாசி வீதியில் எமனையும், தெற்கு -மேலமாசி வீதிகளின் சந்திப்பில் நிருதியையும், மேலமாசி வீதியில் வருணனையும், மேல-வடக்கு மாசி வீதிகளின் சந்திப்பில் வாயுவையும், வடக்கு மாசி வீதியில் குபேரனையும் வடக்கு- கிழக்கு மாசி வீதிகளின் சந்திப்பில் ஈசானனையும் வெற்றி கொண்டு, பின் நந்தி தேவரையும் மீனாட்சி வெற்றி கொள்கிறாள்.பின் சொக்கநாதரே போருக்கு வர அவரைக் கண்டவுடன் தடாதகை பிராட்டியான மீனாட்சி, நாணம் கொள்ள அவளது மூன்றாவது தனம் மறைவதாக ஐதீகம். இந்நிகழ்ச்சியை விளக்கும் ஓவியங்களை ஊஞ்சல் மண்டபத்தில் காணலாம்.

திருக்கல்யாணம்: மீனாட்சி அம்மன் திருமண வைபவம் உலக பிரசித்தி பெற்றது. இத்திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மணமக்களுக்கு திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலியவற்றை மொய் செய்கின்றனர். இந்நிகழ்ச்சிக்குப் பின் குண்டோதரனுக்கு அன்னமிடல் எனும் திருவிளையாடற்புராண நிகழ்ச்சி நடைபெறும். பதினோராம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். இத்தேர்த்திருவிழாவில், பல்வேறு ஊர்களிலிருந்து இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் பெருவாரியாக கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இது மக்களின் சமூக ஒற்றுமையை வலியுறுத்துகிறது.ஊர்வலம் முடிந்தபின்இருவருக்கும் கிரீடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.பனிரெண்டாம் நாள் இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருவிளையாடற்புராண நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின்னர் கொடியிறக்கித் தீர்த்தத்திருவிழாவுடன் இச்சித்திரைத் திருவிழா இனிதே நிறைவுறுகிறது.

அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: மதுரை விழாக்களில் இன்னொரு மகுடம். லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் ஒன்று சேர்வதும், வழி எங்கும் அழகரை வரவேற்பதும் கண்கொள்ளா காட்சி. இப்படி மதுரையின் அத்தனை நாட்களும் திருவிழா நாட்கள் தான்!மதுரை மக்களின் வெளியூர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இந்த திருவிழா காலத்தில் மதுரைக்கு வருவர். அவர்களை வீட்டிற்கு அழைத்து திருவிழா காணச் செய்வதும, விருந்து தந்து உபசரிப்பதும் தமிழர்களுக்கே உரிய பண்பாடாகும்.முனைவர் தி.சுரேஷ்சிவன் செம்மொழி இசைத்தமிழ் அறிஞர்மதுரை. 94439 30540


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !