அடர்ந்த வனத்தை தாண்டி ஒரு ஆன்மிக பயணம்: அகஸ்திய மலை புனிதயாத்திரை 15ல் துவக்கம்!
நாகர்கோவில் : சபரிமலையில் மகரவிளக்கு முடியும் 15ம் தேதி முதல் அகஸ்திய முனிவரின் தரிசனத்திற்காக பக்தர்கள் அடர்ந்த கானகம் வழியாக அகஸ்திய மலை புனித பயணத்தை துவங்க உள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனம்... கண்ணுக்கு எட்டும் திக்கெல்லாம் பச்சை பட்டு உடுத்தியது போல் பசுமையான மரம், செடி, கொடிகள்... மூலிகைகளை தழுவி வந்து நம்மையும் வருடி செல்லும் மெல்லிய தென்றல்... மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் கொட்டும் அருவிகள்... பாய்ந்து செல்லும் நீரோடைகள்... மனதை மயக்கும் அமைதி... எங்கும் காண கிடைக்காத அபூர்வ மூலிகைகள்... தொட்டுப்பார் என்று சவால் விடுவதை போல அருகில் ஓடி வந்து பின்னர் போக்கு காட்டும் காட்டு முயல்கள்.., சற்றே எட்ட நின்று காதுகளை உயர்த்தி நம்மை ஆச்சரிய பார்வை பார்க்கும் மான்கள்... இதுவரை கண்டிராத உயிரினங்கள்... கேட்டிராத பறவைகளின் குரல்கள்... என்று கண்ணிற்கும், காதிற்கும் இனிமை சேர்க்கும் அழகிய வனப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 200 அடி உயரத்தில் தென்னிந்தியாவின் இரண்டாவது பெரிய சிகரமான அகஸ்திய கூட (முதல் சிகரம் ஆனைமுடி) மலையின் உச்சியில் அமைந்துள்ளது சித்த மருத்துவத்தின் தந்தை என போற்றப்படும் குறுமுனி அகஸ்தியரின் கோயில்.
தமிழக- கேரள எல்லையோரத்தில் அகஸ்திய மலையின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் சிறிய அகஸ்தியர் கோயில் அமைந்துள்ளது. கோயில் என்றால் நாம் கருதுவதுபோல் மேலே விமானம், கோபுரம், பிரகாரங்கள் என்று எதுவும் இங்கு இருக்காது. அகஸ்திய முனிவரின் சிலை மட்டுமே அங்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகத்தில் பூஜாரி இல்லாமல் பக்தர்களே பூஜை செய்யும் அபூர்வமான சில கோயில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து 860 மீட்டர் உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ள அகஸ்திய முனிவரின் சிலைக்கு பூஜை செய்து வழிபட எல்லா ஆண்டும் தை மற்றும் மாசி மாதங்களில் இந்த கோயிலிற்கு பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக சபரிமலையில் மகரஜோதி தெரியும் நாளில் துவங்கி சிவராத்திரி வரை இந்த புனிதப்பயணம் தொடரும். தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்வர். கேரளாவின் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் இது சபரிமலை போல புண்ணிய தலம் தான். உலகின் அபூர்வ மூலிகைகள், சுத்த நீர் குளங்கள், நதிகள், அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் நிறைந்தது அகஸ்த்திய வனம். பேப்பாறை, நெய்யாறு வனவிலங்குகள் சரணாலயத்திற்கு உட்பட்ட, யானை மற்றும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விலங்குகள் நிறைந்த அகஸ்திய மலைக்கு சென்று வருவது என்பது ஒரு சாகச யாத்திரை தான். இங்கு யானைகள், காட்டு எருமைகள், சிங்க வால் குரங்குகள், மலை அணில்கள் போன்றவற்றை நாம் நமது கண்களால் பார்க்க முடியும். காட்டிற்குள்ளே உள்ள பொங்காலைப்பாறையில் உள்ள மானசரோவரில் குளிப்பதும், மூலிகைகளின் வாசம் மிதந்துவரும் காற்றை சுவாசிப்பதும் பக்தர்களுக்கு இனிய அனுபவம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் தமிழக, கேரள பகுதிகள் நம் கண்களுக்கு விருந்து படைக்கும். தமிழகத்தின் புண்ணிய நதிகளில் ஒன்றாக கருதப்படும் தாமிரபரணியும், கேரளாவின் நெய்யாறு, கரமனை, வாமனபுரம் போன்ற ஆறுகளும் உற்பத்தியாவது அகஸ்திய வனப்பகுதியில் இருந்துதான். . அகஸ்திய முனிவருக்கு விருப்ப மரமான அகத்தி இந்த மலையில் அதிகமாக காணப்படுகிறது.
எப்படி செல்வது? திருவனந்தபுரம் பி.டி.பி., நகரில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு வார்டனின் அலுவலகத்தில் கட்டணம் கட்டி பயணத்திற்கான அனுமதியை வாங்க வேண்டும். பின்னர் போணக்காடில் உள்ள வனத்துறை தகவல் தொடர்பு மையத்தில் நடக்கும் பரிசோதனைக்கு பிறக காட்டிற்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். சிறந்த, அபூர்வ மூலிகைகள் நிறைந்த வனம் என்பதால் வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு தான் காட்டிற்கு செல்லவேண்டும். போணக்காட்டில் இருந்து அகஸ்திய மலைக்கு 30 கி.மீட்டர் தொலைவு உள்ளது. போணக்காட்டில் இருந்து பக்தர்கள் குழுவாக அகஸ்த்திய மலைக்கு புறப்படுவர். வனவிலங்குகள் அதிகம் காணப்படும் பகுதி என்பதால் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக பாதுகாப்புடன் தான் அழைத்துச் செல்லப்படுவர். போணக்காட்டில் துவங்கும் பயணம் கரமனையாறு, அட்டையாறு, குட்டியாறுகளை தாண்டி எழுமடக்கு குன்று, கரடியப்பம் போன்ற மலைகள் ஏறி அதிருமலை கேம்ப் ஷெட்டிற்கு செல்வதுடன் முதல் நாள் யாத்திரை நிறைவடைகிறது. இங்கு வனத்துறைக்கு சொந்தமான ஒரு கட்டடம் உள்ளது. இங்கு தான் பக்தர்கள் அன்று இரவு ஓய்வு எடுப்பார்கள். மறுநாள் அதிகாலையில் கண் விழிக்கும்போது அதிருமலையில் இயற்கையின் காண்பதற்கரிய காட்சிகளான பல பறவைகள், விலங்குகளை பார்க்க முடியும். இங்கிருந்து சுத்தமான வாயுவை சுவாசித்துக்கொண்டு அகஸ்தியரை நோக்கி யாத்திரை புறப்படலாம். இடையில் சாத்தனப்பு, கரடியப்பு போன்ற பாறைகளில் ஓய்வு எடுக்கலாம். இப்பகுதி யானைகள் நிறைந்த பகுதி என்றாலும் புனித யாத்திரை காலத்தில் இவை உள் வனங்களுக்கு சென்றுவிடும். அங்கிருந்த பொங்காலை பாறைக்கு யாத்திரை செல்லும். பக்தர்கள் மலை தேவதைகளை தியானித்து பொங்காலைப்பாறையில் பொங்காலையிடுவர். பின்னர் செங்குத்தாக உயர்ந்து நிற்கும் மலை சிகரத்தை நோக்கிய யாத்திரை புறப்படும். இரண்டாவது நாள் யாத்திரை செங்குத்தான மலை வழியாக என்பதால் சிறிது கடினத்தை சந்திக்கவேண்டியிருக்கும். குறிப்பாக இந்த பகுதியில் உள்ள முட்டிடிச்சான் பாறை பகுதியில் மலை ஏறுவது சற்று கடினம். பெயரை போலவே இந்த மலையில் ஏறும்போது நமது கால் முட்டுகள் மார்பில் தட்டும். மலை உச்சிக்கு செல்லும் பக்தர்கள் அங்கு அகஸ்தியரை கண் குளிர தரிசித்து, அவரது விக்ரகத்திற்கு அபிஷேகமும் பூஜையும் செய்து பின்னர் மலை இறங்குவார்கள். சில நேரங்களில் மலையில் காலநிலை நன்றாக இருக்கும். சில வேளைகளில் மழை பெய்யும். சில நேரங்களில் பனி மூட்டம் வெண் புகை போல காட்சியளிக்கும். மழை பெய்தால் மலையில் அட்டைகள் தொந்தரவு அதிகமாக காணப்படும். பக்தர்களுக்கான உணவு போணக்காடு மற்றும் அதிருமலையில் உள்ள இ.டி.சி., கமிட்டி கேண்டீன்களில் வழங்கப்படும். பூஜைக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் தங்கள் கையில் கொண்டு செல்லவேண்டும். உள்வனங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் கோட்டூர், பேப்பாறை வழியாக அகஸ்தியவனத்திற்கு வருகின்றனர். தமிழகத்தின் முண்டன்துறை வனவிலங்கு சரணாலய பகுதிகளில் உள்ள ஆதிவாசிகளும் அகஸ்திய வனத்திற்கு வந்து தரிசனம் செய்கின்றனர். காட்டிற்குள் மது அருந்தக்கூடாது என்று சட்டம் உள்ளது. பெண்கள் வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்றாலும் இங்கு பெண்கள் வருவது அரிது.