கள்ளக்குறிச்சி கோவிலில் சேஷ வாகன வீதியுலா
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தில்லை கோவிந்தராஜ பெருமாள், சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கள்ளக்குறிச்சியில் திருப்பதியின் ஏற்றம் கொண்ட புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. கடந்த 20ம் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், ஐந்தாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு பெருமாளுக்கு சர்வ அலங்காரம் செய்து, சேஷ வாகனத்தில் எழுந்தருள செய்து, பரமபதநாதன் தரிசனம் நடந்தது. வைஷ்ணவ சம்பிரதாய பூஜைகளுக்குப்பின் நடந்த வீதியுலாவில், பெருமாள் சேஷ வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாகவதர்கள் நாம சங்கீர்த்தன பஜனை பாடி சென்றனர். நாளை மாலை பெருமாள், தாயார் திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்ப பல்லக்கில் வீதியுலாவும் நடக்கிறது. சித்ரா பவுர்ணமி தினமான 29ம் தேதி பெருமாள் தேரோட்டம் நடத்துகின்றனர்.