முதல்நாள் ஞாயிறு ஆனது ஏன்?
உலகத்தின் இயக்கமே சூரியனின் இயக்கத்தைக் கொண்டு தான் நடக்கிறது. சூரியோதயத்திற்கு முன் காலையில் விழித்து அன்றாடக் கடமைகளைச் செய்யவேண்டும். மனிதர் மட்டுமில்லாமல் எல்லா உயிர்களும் சூரியோதயத்தின் போது கண்விழிக்கின்றன. தாவரங்கள் சூரியஒளியின் துணையோடு ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகிறது. பறவைகள் இரை தேடச் செல்கின்றன. மனிதர்கள் தங்கள் கடமையைச் செய்கின்றனர். ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களுக்கும் ஜீவாதாரமாக சூரியன் திகழ்கிறது. அதனால், வாரத்தின் முதல்நாளில் சூரியனுக்குரிய நாளாக ஏற்படுத்தினர். தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் முதல் நூலான சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தின் தொடக்கமே ஞாயிறு போற்றுதும் என்றே தொடங்குகிறது. மற்ற இயற்கை வழிபாடுகளான நிலா, மழை போன்ற தெய் வங்கள் சூரியனுக்கு பின்னரே குறிக்கப்படுகின்றன.
சூரிய வழிபாடு: ஆதிநாள் முதலே அகிலம் முழுதும் சூரிய வழிபாடு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சூரிய வழிபாடே பொங்கல் பண்டிகையின் தொடக்கம் என்கின்றன வேதங்களும் புராணங்களும். முற்காலத்தில் சூரிய வழிபாடாகவும், விரதமாகவுமே இருந்து, பின்னரே பொங்கல் திருநாளாக மாறியுள்ளது இவ்விழா. சூரியனே உலகின் முதல்வன் என்கின்றன வேதங்கள். கண்களால் காணமுடியும் தெய்வம் சூரியனே என்று அவனையே முன்னிலைப்படுத்தி மந்திரங்கள் பலவும் ரிக்வேதத்தில் சொல்லப்பட்டுள்ளன. உலகத்து இருளைப் போக்குவதற்கான ஜோதியினை உருவாக்குபவன் சூரியனே என்கிறது யஜுர் வேதம். உயிர்களின் வளர்ச்சிக்குத் தேவையான வெப்பத்தினை அளிப்பவர், அகிலம் முழுதும் வலம் வந்து தனது தேஜஸால் பிரகாசத்தினை ஏற்படுத்துபவர் என்று சூரியனைப் போற்றுகிறது சாமவேதம். உயிர்களை நோய் பீடிக்காமல் காத்திடும் மருத்துவனாகத் திகழ்பவர் ஆதித்யனே எனப் புகழ்கிறது அதர்வண வேதம். (விஞ்ஞானமும் சூரியனின் ஒளி பல நோய்கள் நம்மை அண்டாமல் காப்பதாகச் சொல்கிறது). சூரிய உபநிஷதத்தில், உலகமே சூரியனிடமிருந்துதான் தோன்றியது, அவனே விஸ்வவியாபியாக இருக்கிறான் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோதிட சாஸ்திர வல்லுநர்களுள் மிகச் சிறப்பானவராகச் சொல்லப்படும் வராக மிகிரர், மக்கள் நலனுக்காக நடத்தப்படும் யாகங்கள், ஹோமங்கள் ஆகியவற்றில் ஆதவனுக்கே முக்கியம் தரப்படவேண்டும் எனச் சொல்கிறார்.
ரிக்வேதத்தின் ஒரு பகுதியான ஐதிரேய ஆரண்யகம், சூரியனை விரதமிருந்து வழிபட்டே இந்திரன் தனது செல்வாக்கினைப் பெற்றான் என்கிறது. இந்திரன், கவமாயன தினத்தின் முதல்நாளே, மகாவிரதம் எனும் அந்த விரதத்தைக் கடைப்பிடித்தானாம். கவமாயனம் என்பது ஒவ்வொரு ஆண்டும் சூரிய மண்டல சுழற்சியில் மாற்றம் ஏற்படும் நாளாகும். இது தைமாதம் முதல் நாள் ஏற்படுகிறது. அதற்கு முந்தைய நாளில் இந்திரன் விரதம் அனுஷ்டித்ததாலேயே அவன் பெயரால் இன்றும் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தைமாத முதல் நாளிலிருந்து சூரியனின் வெப்பம் அதிகரிக்கும். எனவே அன்று சூரியனை வழிபடுவதால் தாவரங்கள் செழிக்கும் என்றும், உயிர்கள் நோய்களில் இருந்து விடுபடும் எனவும் வேதங்கள் குறிப்பிடுகின்றன. தைமாத முதல் நாள், சூரியன் தனது பகை கிரகமான சனிபகவானின் ஆட்சிக்கு உட்பட்ட மகர ராசியில் பிரவேசிக்கிறான். இரு பகை கிரகங்கள் ஒன்று சேரும் நாளில் எந்தவித தீங்கும் நேரக்கூடாது என்பதற்காகவே சூரிய வழிபாட்டினை நம் முன்னோர் ஏற்படுத்தி இருப்பதாக பண்டைய ஜோதிட சாஸ்திரங்களில் உள்ளது. ராமபிரான் சூரிய வம்சத்தில் உதித்தவர். ராம ராவண யுத்தத்தின் போது ராமரின் வலிமை குன்றாமல் இருக்க சூரியனை வழிபடச் சொன்னார் அகத்தியர். அப்போது அகத்தியரால் ராமசந்திரனுக்கு சொல்லித்தரப்பட்டதே ஆதித்ய ஹ்ருதயம் எனும் துதி. நம் நாட்டில் மட்டுமன்றி, உலக நாடுகள் பலவற்றிலும்கூட சூரிய வழிபாடு பண்டைய காலம் முதலே இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
மகத நாட்டு புரோகிதர்கள் பலர் பாரசீக நாட்டிற்குச் சென்றபோது அங்கிருந்த சூரிய வழிபாட்டு முறையினைக் கற்றனர். அவர்கள் திரும்பி வந்ததும் அந்த முறைப்படி சூரிய பூஜைகளை வடநாட்டில் நடத்தினார்கள். சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்களாக எகிப்து நாட்டின் அரச பரம்பரையினரான பாரோ இனத்தினர் தங்களைச் சொல்லிக் கொண்டனர். அறுவடை காலத்தில் சூரியனை வணங்கும் பழக்கம் அவர்களிடம் இருந்தது. தென் அமெரிக்கப் பழங்குடியினரான இன்காக்களிடம் சூரியனை வழிபடும் பழக்கம் இன்றும் உள்ளது. இவர்கள் பெரு நாட்டில் வசிக்கின்றனர். பார்ஸிகள் மித்திரன் என்றும்; கிரேக்கர்களும் ரோமானியர்களும் ஹீலியஸ், அப்போலோ என்ற பெயர்களிலும் சூரியனை வணங்குகின்றனர். கதிரவனின் தேரினை பரியோஸ், ஏவோஸ், ஏதென், ப்லீகன் என்ற நான்கு குதிரைகள் இழுப்பதாக ரோமானிய வரலாறு கூறுகிறது. உலகத்தினைக் காப்பதால், சூரியனை நண்பனாக பாவித்து மித்ரன் என அழைத்து வணங்கும் பழக்கம் பார்ஸி இன மக்களிடம் உள்ளது. விஸ்வாமித்திர மகரிஷியால் கண்டறியப்பட்டதும் வேதமந்திரங்களின் தாயாகப் போற்றப்படுவதுமான காயத்ரி மந்திரமும் சூரியனைப் போற்றுகிறது. சூரியனே சவிதா - அதாவது உயிர்களை ரட்சிப்பவன் என்கிறது இம்மந்திரம். வேதகாலத்திற்கும் முற்பட்டதும், சகல வளமும் நலமும் தரக்கூடியதாகச் சொல்லப்படுவதுமான சூரிய வழிபாடு, பொங்கல் பண்டிகை என தமிழர் திருநாளாக இன்று கொண்டாடப்படுவது நமக்கெல்லாம் பெருமைதானே!
காலை, மாலை சூரியன்: சூரியனின் பேராற்றலை நாம் வார்த்தைகளால் அளவிட முடியாது. விடியலில் உதிக்கும்போது ஆதவன், இலங்கை நோக்கி துயிலில் ஆழ்ந்திருக்கும் மாதவனின் காலைப் பார்த்தபடி உதயமாகிறான். எனவே சூரியன் உதயமாகும் நேரத்தை, காலை என்கிறோம். அந்தியில் சூரியன், திருமாலின் முழு உருவத்தையும் பார்ப்பதால் அந்த நேரத்தை, மாலை என்கிறோம். ஒரு சமயம் சூரிய பகவானுக்குத் தன் மனைவியால் சங்கடம் ஏற்பட்டது. எப்படி? எந்தக் காரணத்தைக் கொண்டும் தன் கணவன், பிற பெண்களை ஏறெடுத்துப் பார்ப்பதைக்கூட விரும்பாதவர்கள் பெண்கள். எந்தப் பெண்ணுக்காவது தன் கணவனை பிற பெண்ணுக்கு விட்டுக் கொடுக்க மனம் வருமா?
ஆனால் ஒரு பெண்ணுக்கு வந்தது. அவள், சூரியனின் அன்பு மனைவி சமுக்ஞாதேவி. இவர்களது இல்லத்தில் எந்தக் குறையும் இல்லை. இரண்டு ஆண் மகன்களையும் ஒரு பெண் மகவையும் பெற்றெடுத்தனர். வைவஸ்வதமனுவும் எமனும் இரு பிள்ளைகள். யமுனா, பெண். இவர்களில் எமன் தன் தவ வலிமையால் காலதேவன் ஆனான். யமுனா, யமுனை நதியானாள். என்னதான் சூரிய பகவானோடு மனமொத்து இல்லறம் நடத்தி மக்கள் மூவரைப் பெற்றெடுத்தாலும் சமுக்ஞைக்கு ஒரு சிறு சங்கடம் இருந்தது. அது, சூரியனின் வெப்பத்தை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதுதான். வெயிலில் பட்ட புழுபோல தினம் தினம் அவதிப்பட்டாள். வெயிலோனின் வெம்மையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது? தினமும் எழுந்த சிந்தனைக்கு, ஒரு நாள் விடை கிடைத்தது. ஒருநாள் அதே சிந்தனையோடு இருந்த சமுக்ஞை, தன் அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தன் வாடிய முகத்தைப் பார்த்தாள். மின்னலாய் அவள் மனதில் ஒரு யோசனை தோன்ற, கண்ணாடியில் தெரிந்த தன் நிழலை மீண்டும் பார்த்தாள். என் நிழலே! வெளியே வா!
தேவமங்கை அல்லவா! அவள் அழைத்ததும், நிழல் வெளியே வந்தது, ஓர் அழகிய பெண்ணாய்! அந்தப் பெண்ணைப் பார்த்து சமுக்ஞை சொன்னாள். பெண்ணே! நீ என் நிழல். இப்போது உயிர் பெற்று என் சகோதரி ஆகிவிட்டாய். நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்... சொல்லுங்கள் என்றாள் நிழல் பெண். என் சாயலை உடையவளாதலால் உனக்கு சாயா என்றே பெயர் சூட்டுகிறேன். என் கணவருக்கு நீ மனைவியாக இருக்க வேண்டும்! என்ன...? பதறினாள் சாயா தேவி. பதட்டப்படாதே.. சாயா! என் கணவருக்கு நீ மனைவியாக இரு. ஒரு மனைவிக்குக் கிடைக்க வேண்டிய எல்லா சந்தோஷமும், உரிமையும் உனக்குக் கிடைக்கும் என்றாள் சமுக்ஞை. நீங்கள்? நான் குரு÷க்ஷத்திரம் சென்று தவம் செய்யப் போகிறேன் என்ற சமுக்ஞை மறைந்தாள். சாயாதேவி, சூரியனின் மனைவியாக வாழத் தொடங்கினாள். இவர்களுக்கு தபதி, வியஷ்டி என்ற இரு பெண்கள் பிறந்தனர். ஒரு ஆண் மகவும் பிறந்தது. அந்த ஆண் மகன் பெயர், சனி. ஆமாம்.. இவரே சனிபகவான். பலகாலத்துக்குப்பின் ஒருநாள் சூரியனுக்கு சாயாதேவி பற்றிய உண்மை தெரியவந்தது. உண்மையை அறிந்த சூரியனுக்கு தன் இளைய மனைவியின் மேல் கோபம் வரவில்லை. அவளை மன்னித்தான். பின் முதல் மனைவியின் நினைவால் வாடத் தொடங்கிய சூரியன், அவளைத் தேடி அலைந்தான். தன் யோக சக்தியால் இமயமலைச் சாரலில் பெண் குதிரையாக அவள் உலா வருவதை உணர்ந்தான். அவளிடம் சென்றான் சூரியன். சமுக்ஞை! உன் அப்பா விஸ்வகர்மாவின் தவம் காரணமாக என் வெப்பம் குறைந்துவிட்டது. நீ என்னுடன் வா! என அழைக்க, அவளும் சூரியனுடன் புறப்பட்டாள். சூரியனின் இல்லறம் சமுக்ஞை மற்றும் சாயாதேவி என இரு மனைவியருடன் நல்லறமாகத் தொடர்ந்தது. இதோ இன்றும் நாம் கண்ணால் காணக் கூடிய தெய்வமாகத் திகழும் சூரியன், பலகாலம் முன்பு அதீத வெப்பத்துடன் இருந்திருக்கிறான் என்பதும், பிறகே குளிர்ந்து வெம்மை குறைந்திருக்கிறான் என்பதும் விஞ்ஞானமும் ஏற்கும் உண்மை. சமுக்ஞாவுக்கு உஷா அல்லது உஷை என்றும் பெயர் உண்டு. அவள் பெயராலேயே விடியற்காலை வேளை உஷத்காலம். சாயாதேவியின் பெயரால் சாயங்காலம் வந்தது. காலையும், மாலையும் சூரியனைப் பணிவோம். ஆயுள், ஆரோக்யம் பெறுவோம்.
சூரியனின் ஏழு குதிரைகள்: தஞ்சையில் உள்ள சூரியனார் கோயிலைக் கட்டியவர் முதலாம் குலோத்துங்க சோழன். குலோத்துங்க சோழ மார்த்தண்ட ஆலயம் என்றே இக்கோயில் முதலில் அழைக்கப்பட்டது. தன்மதான வினோதச் சதுர்வேதி மங்கலம் என்பது ஊரின் பெயர். சூரியனுக்குச் சிறப்புமிக்க கோயில் என்பதாலேயே கோயிலும் ஊரும் சூரியனார் கோயில் என்றானது. சூரியன் பெயரால் பல தீர்த்தக் குளங்கள் அமைந்துள்ளன. அவற்றுள் சிறப்பானவை; சூரிய குண்டம் - திருவெண்காடு; சூரிய தீர்த்தம் - கும்பகோணம்; பானு தீர்த்தம் - காஞ்சிபுரம் ஆகியன. இவை சூரியன் நீராடிய குளங்களாகப் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
காஸ்யப முனிவரின் மனைவி வினதைக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் - அருணன்; இளையவன் கருடன். அருணன், இடுப்புக்குக் கீழே உடல் செயல்படாத நிலை உள்ளவன். ஆனால் அவனது உடலில் மேற்பகுதியில் பலமும் தேஜஸும் அதிகம். சூரியன், தனது தேரினை ஓட்டத் தகுதியானவரைத் தேடியபோது, சூரியனின் உஷ்ணம் காரணமாக எவரும் அவர் அருகில் போக முடியவில்லை. அந்த சமயத்தில் அருணனின் தேஜஸ் சூரியனுக்கு ஈடு கொடுத்தமையால், அருணனை சூரியனுக்குத் தேரோட்டியாக்கினார் காஸ்யப முனிவர். சூரியனை உதயத்தின்போது இந்திரனும், மதியத்தில் வாயுவும்; அஸ்தமனத்தில் சந்திரனும் வருணனும்; இரவில் மும்மூர்த்திகளும்; நள்ளிரவில் குபேரனும் வணங்குவதாக ஆதித்யபுராணம் சொல்கிறது.
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குப் போகும் பாதையில் உள்ள ஒரு குடைவரைக் கோயிலில் சூரியனுக்கு சிலை உள்ளது. குடைவரைக் கோயில்கள் உள்ள மகாபலிபுரத்திலும் சூரியனுக்குச் சிற்பங்கள் உள்ளன.
சூரியனின் தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. இத்தேர் செல்லும்போது சுவடுகள் பதிவது கிடையாது. காரணம் அத்தேர் பயணிப்பது வாயு மண்டலத்தில்தான். வாயுவின் ஏழு மண்டலங்கள் ஒன்றின் பின் ஒன்றாக சூரியனைத் தம் தோள்களில் சுமந்து செல்வதாக ஐதிகம். அதுவே சூரியனின் ஏழு தேர்க் குதிரைகளாக கருதப்படுகின்றன. சூரிய ஒளியை - கிரணத்தை அல்ட்ரா வயலட் கதிர்கள் என்பார்கள். அந்தப் புற ஊதாக் கதிர்களில் உள்ள நிறங்கள் எத்தனை தெரியுமா? ஏழு. ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு. இந்த நிறங்களைத் தான் ஏழு குதிரைகள் குறிக்கின்றன. இந்த ஏழும் கலந்த நிறம் வெள்ளை என்கிறது விஞ்ஞானம். இந்த ஏழு நிறங்களும் கலந்தால் பச்சை வரும் என்று கருதியதால் குதிரைக்கு நிறம் பச்சை என்கிறது சூரிய சதகம். அந்த ஏழு குதிரைகள் பெயர்கள் காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ஜகதி, ப்ருஹதி, பங்கதி, திருஷ்டுப் ஆகியவையே.
உலகை வலம் வந்து காத்திடும் சூரியனுக்கு பலப்பல பெயர்கள் உண்டு... சில இதோ... ஆயிரம் தலைகளை உடைய ஆதிசேஷனைப் போல, ஆயிரம் கிரணங்களோடு சூரியன் காட்சி தருவதால், ஆயிரம் ஜோதி உள்ளான் என்பது சூரியனுடைய நாமாக்களுள் ஒன்று. சூரியன் யாருடைய கர்ப்பத்திலும் வாசம் செய்யாமல் அவதரித்ததால், அஜன் எனப்படுகிறார். உலகப் பிரஜைகளின் உற்பத்தி சூரியனிடமிருந்தே தொடங்குவதால், இவரே பிரஜாபதி. ஒரு யுகத்தில், சூரியன் அதிதியிடமிருந்து பிறந்ததால் ஆதவன் எனப்படுகிறார். அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஒளி மழையைப் பொழிவதால், சவிதா. பல்வகை வண்ணங்களைக் கொண்டவர் ஆதலால் சித்ரபானு. மிகவும் பிரகாசமான ஒளிக்கற்றைகளைப் பெற்றிருப்பதால் பாஸ்கரன். மூன்று உலகங்களிலும் பயணித்து ஒளி தோற்றுவிப்பதால் திவாகரன்.
அதிதி தேவியிடமிருந்து தோன்றிய அண்டம் இரண்டாகப் பிளந்தது. சூரிய தேவனுக்கு துயரத்தை தந்தபோது காஸ்யபர் அவருக்கு ஆறுதல் கொடுத்தார். அதனால் சூரியனுக்கு ஏற்பட்ட பெயர் மார்த்தாண்டன். மிகவும் விரைவாக சஞ்சரிப்பதால் சூரியன் அரியமான். உலக உயிர்களுக்கு அருள்பாலிப்பதால் புவன மித்ரன். கேட்ட வரத்தை அள்ளித் தந்து அருள்பாலிப்பதால், வருணன். அளவில்லாத செல்வங்களைப் பெற்றிருப்பதால், இந்திரன். எல்லா உலகங்களையும் படைக்கும் வல்லமை பெற்றிருப்பதால் சக்கரன். தேவர்களின் இதயத்தில் இடம் பிடித்திருப்பதால் விவஸ்வான். மேகத்தில் மூலமாக இடி முழக்கம் செய்வதால் மர்ஜன்யன். எல்லா உலகங்களையும் போஷிப்பதால் பூஷ்வா. ஒவ்வொரு நாளும் உதயமாகி உலகங்களைக் காப்பாற்றுவதால் சூரியன்.
தை சூரியனுக்கு என்ன பெயர்?: சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்வார். இதில் மூன்று ராசிகள் குறிப்பிடத் தக்கவை. சித்திரையில் மேஷராசியில் சூரியன் உச்ச பலத்தையும், ஐப்பசியில் பலவீனத்தையும் (நீச்சத்தன்மை) அடைகிறார். மகரராசியில் பிரவேசிக்கும் நாளை மகரசங்கராந்தி என்பர். இம்மாதத்தில் சூரியனுக்கு பகன் என்று பெயர். தை மாதம் சூரியனை வழிபட்டவர்களுக்கு எல்லா வளங்களும், பால்பாக்கியமும் (பசுக்களால் யோகம்) உண்டாகும்.
சூரிய சாரட்: சூரியனுக்குரிய தேரில் காயத்ரி, ப்ருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஷ்டுப், அனுஷ்டுப், பங்க்தி என்ற குதிரைகள் பூட்டப்பட்டுள்ளன.
கிச்சடி திருவிழா: சூரியன் வடக்கு திசை நோக்கிப் பயணிக்கத் துவங்கும் நாளே பொங்கல் நாள். சூரியன் மகர ராசிக்குள் நுழைவதை குறிக்கும் நாள் இது. இந்த நாளில் பகல் நேரம் கூடுதலாகி, இரவுநேரம் குறையும். இந்த நிகழ்வுவாழ்வின் இருண்ட பகுதிகளை குறைத்து, பிரகாசத்தை ஏற்படுத்தும் என்பது நம்பிக்கை. பொங்கல் என்றால் மழைக்கு பின் தெரியும் தெளிவான வெண்மேகம் என்ற பொருள் உள்ளது. இந்த மகிழ்ச்சியான தினத்தை தமிழகத்தில் பொங்கல் என்றும், வடமாநிலங்களில் கிச்சடி என்றும் ஆந்திரா, கேரளாவில் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது.
யார் இந்த தண்டி: சூரியனுக்குரிய வாகனம் குதிரை. அதற்கு சப்தா என்று பெயர். சப்தா என்றால் ஏழு. ஏழு குதிரைகள் சூரியனின் தேரை இழுத்துச் செல்கின்றன. ராசி விட்டு ராசி சஞ்சாரம் செய்வதே சூரியனின் தொழில். இதனால் ஆற்றலுடன் ஓடும் சுபாவம் கொண்ட குதிரையை வாகனமாகக் கொண்டிருக்கிறார். சூரியலோகத்தில் தண்டி, பிங்கலன் என்னும் இரு துவார பாலகர்கள் காவல் புரிகின்றனர். இதில் தண்டியே, சூரியனுக்குரிய அன்றாடப் பணிகளை வகுத்துக் கொடுப்பவர். இவர்தான் சூரியனின் பெர்சனல் அசிஸ்டென்ட். பிங்கலன் காலையில் ஒளியையும், மாலையில் இருளையும் பிரித்தளிக்கும் செயலைச் செய்கிறார்.
சூரிய வழிபாட்டுக்குரிய ரதசப்தமி:
உத்திராயண காலம்: சூரியபகவான் தென் திசையிலிருந்து தனது ரதத்தை வடதிசை நோக்கி திருப்பி தனது பயணத்தை துவக்கும் காலமே ரதசப்தமி எனப்படுகிறது. சாஸ்திர ரீதியாக உத்திராயண காலம் என்பது ரதசப்தமி அன்று தான் துவங்குகிறது. மகாபாராத கதாநாயகன் பீஷ்மர் தனது உடலில் இருந்து உயிரை நீக்குவதற்கு இந்த ரதசப்தமி நாளைத் தான் எதிர்பார்த்துக் காத்திருந்து மறுநாள் அஷ்டமி அன்று உயிர் நீத்தார்.
வேதத்தில் சூரியவழிபாடு: உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாக சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக(கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது. இப்பழக்கத்தை ஒழித்தவர் ஆதிசங்கரர். ஆதிகாலத்தில் சூரிய உபாசனையை மந்திரப் பூர்வமாக செய்துவந்தனர். பின்னர் உருவவழி பாட்டில் சூரியனை வழிபடத் தொடங்கினர். புராணங்களில் சூரியனுடைய ரூபலட்சணம் பலவிதங்களில் வர்ணிக்கப்படுகிறது. சிவ ஆகமங்களில் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமான் உறைந்திருப்பதாக கூறுகின்றன. அதனால் தான் சிவபெருமானுக்கு சிவசூரியன் என்றொரு திருநாமம் உண்டு. சூரியன் சிவனின் அஷ்டமூர்த்தங்களில் ஒருவராகவும், வலது கண்ணாகவும் இருக்கிறார்.
சிவசூரிய நாராயணர் கோயில்: தமிழகத்தில் சூரியனுக்காக அமைந்துள்ள தலம் சூரியனார் கோயில். முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது. இம்மன்னனின் பெயராலேயே இங்குள்ள இறைவன் குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர் என்று குறிக்கப்படுகிறார். கருவறையில் சூரியன் மேற்குநோக்கி காட்சி தருகிறார். உஷா,பிரத்யுஷா என்னும் இருதேவியரும் உடன் வீற்றிருக்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில், ஆகமவிதிப்படி சூரியன் நடுநாயகமாக இருக்க, சந்திரன், புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் நான்குநேர் திசையிலும், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோர் நான்கு மூலைகளிலும் அமைக்கப்படவேண்டும். அம்முறைப்படி இந்த கோயில் அமைந்துள்ளது சிறப்பு. குரு தன் அருட்பார்வையால் சூரியனுக்கு எதிரே அமர்ந்து அவரின் உக்கிரத்தை தணிக்கிறார்.
குடை தானம் செய்யுங்க: உத்தராயண புண்ணியகாலமான தை முதல் ஆனிவரையிலான காலத்தில் மட்டுமே சூரியனுக்குரிய சப்தமி விரதத்தை தொடங்கவேண்டும். வளர்பிறை சப்தமியில் இவ்விரதத்தை மேற்கொள்வர். குறைந்தபட்சம் தொடர்ந்து ஏழு சப்தமி நாட்களுக்கு விரதத்தைத் தொடர வேண்டும். சூரியதிசை, சூரியபுத்தி நடப்பவர்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் நன்மை உண்டாகும். பாவங்களைப் போக்கி புண்ணிய பலன்தரும் விரதம். சப்தமி விரதம் மேற்கொள்பவர்கள் சூரியனின் வெம்மையிலிருந்து தப்பிக்க உதவும் செருப்பு, குடைகளைத் தானம் கொடுப்பது நல்லது. சூரியனுக்குரிய ஸ்தோத்திரங்கள், ஆதித்ய ஹ்ருதயம் போன்ற துதிகளைப் பாராயணம் செய்யலாம். இதனால், ஆரோக்கியமும் தீர்க்க ஆயுளும் உண்டாகும்.
உலகநாடுகளில் சூரியவழிபாடு: நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் எங்கிலு:ம் சூரியவழிபாடு பலகாலமாக இருந்து வந்துள்ளது. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தியர்கள் சூரியனை வழிபட்டு வந்துள்ளனர். அந்நாட்டை ஆண்ட பாரோ வம்சத்து அரசர்கள் தங்களை சூரியன் வழி வந்தவர்களாக கருதினர். அங்கும் உழவுத்தொழில் சிறக்க சூரியனை மக்கள் வழிபட்டனர். பாரசீகர்களின் வேதநூலான ஜெந்த் அவெஸ்தாவில் மித்ரன் என்ற பெயரில் சூரியன் குறிக்கப்படுகிறார். மித்ரன் என்ற பெயர் சூரியனுக்கு உண்டு. மாகர்கள் எனப்படும் பாரசீகர்கள் சூரிய ஆராதனைக்காக இந்தியா வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரிலும், ரோமானியர்கள் ஹைபீரியன் என்னும் பெயரில் வழிபட்டனர். தென்அமெரிக்காவிலுள்ள பெருநாட்டில் இன்காஸ் இனத்தவர்களிடமும் சூரியவழிபாடு இருந்தது.
ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின்மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றனவாம். அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு! ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.