ஆடேஸ்வரர் கோவில் திருப்பணி அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பு
காயார்: ஆடேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு, உபயதாரர்கள் இருந்தும், அறநிலையத் துறை அனுமதி வழங்காமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் வட்டம், காயார் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேதநாயகி உடனுறை ஆடேஸ்வரர் கோவில் உள்ளது. அறநிலையத் துறை நிர்வகிக்கும் இக்கோவிலில், போதிய வருமானம் இல்லாததால், கிராம மக்களே, நித்ய பூஜைகளை நடத்துகின்றனர். இந்நிலையில், கோவிலின் மண்டபம் இடியும் நிலையில் உள்ளதால், கோவிலை புனரமைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். கடந்த, 2015ல், அறநிலையத் துறை அதிகாரிகளிடம், இதுகுறித்து மனு அளித்தனர். அதற்கு, ‘கோவிலை புனரமைக்க தேவையான முழு தொகை வழங்க முடியாது; உபயதாரர்கள் மூலம் மட்டுமே திருப்பணி மேற்கொள்ள வேண்டும்’ என, அத்துறையினர் கூறியதாக தெரிகிறது.இதையடுத்து, காயார் கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த உபயதாரர்கள் பலர் இணைந்து, கோவில் திருப்பணி குழுவை ஏற்படுத்தினர். இதுகுறித்த தகவலையும், அறநிலையத் துறையினரிடம் அளித்தனர். ஆனால், அத்துறையினரோ, இரு ஆண்டுகளுக்கு மேலாகியும், ஆடேஸ்வரர் கோவில் திருப்பணிக்கு அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த மக்கள், கோவிலுக்கு செல்லும் சாலையில், அறநிலையத் துறையின் மெத்தனப்போக்கை சுட்டிக்காட்டும் வகையில், பேனர் வைத்துள்ளனர்.