ஐயப்பன் கோவிலில் புஷ்ப அலங்காரம்
குன்னுார்: வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், 31வது ஆண்டு விழா விமரிசையாக நடந்தது. குன்னுார் அருகே வெலிங்டன் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவிலில், 31வது ஆண்டு விழா விமரிசையாக நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில், அபிஷேகம், உஷபூஜை, விஷ்ணுபூஜை, நீரஞ்சன பூஜை நடந்தன. தொடர்ந்து நடந்த கலச பூஜையில், 25க்கும் மேற்பட்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகளுடன், கலசாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. செண்டை மேளம் முழங்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மாலையில் ஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம், புஷ்ப அலங்காரம், அத்தாழ பூஜை ஆகியவற்றுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில், வெலிங்டன், அருவங்காடு, குன்னுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கும்பாபிஷேக கட்டட கமிட்டியினர் செய்தனர்.