உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்

தஞ்சாவூர்: திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில் ஆடிப்பூரம் விழாவிற்காக, 45 அடி உயரத்தில், 4 டன் எடையில் செய்யப்பட்டுள்ள புதிய தேர் வெள்ளோட்டம், நேற்று நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூரம் உற்சவத்தின் போது, அம்மன் தனித்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறும்.

கடந்த, 1936ம் ஆண்டுக்கு பின், தைப்பூச தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைபட்டது. ஆடிப்பூரம் தேரும், 1932ம் ஆண்டுக்கு பின், ஓடவில்லை. அதனால், தைப்பூச விழாவுக்கான அம்பாள் தேரில், ஆடிப்பூரம் தேரோட்டம் நடந்தது. திருவாவடுதுறை ஆதீனம், 23வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள், கோவை, ஆனைக்கட்டி ஆஸ்ரமம் ஸ்தாபகர் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் முயற்சியில், சிதிலமடைந்திருந்த ஐந்து தேர்களும், புதிதாக செய்யப்பட்டன.அதே போல், அம்மனுக்கு புதிய தேர் செய்ய திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவிட்டார். பக்தர்களின் பொருள் உதவியோடு, இரும்பிலான, 45 அடி உயரம், 15 அடி அகலத்தில் ஆடிப்பூரம் தேர் வடிவமைக்கப்பட்டது. தேரின் மொத்த எடை, 4 டன். நேற்று காலை, புதிய தேர் வெள்ளோட்டம் நடந்தது. முக்கிய வீதி வழியாக, இரண்டு மணி நேரம் தேர் வலம் வந்தது. வரும், 12ம் தேதி, ஆடிப்பூர உற்சவ தேரோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !