சென்னை நகரில் ஆடிப்பெருக்கு கோலாகல கொண்டாட்டம்
சென்னை: சென்னை நகரில், ஆடி மாத மூன்றாவது வெள்ளியுடன், ஆடிப்பெருக்கு விழாவை, பெண்கள் சிறப்பாக கொண்டாடி மகிழந்தனர்.ஆடி மாதத்தின், 18ம் நாளான ஆடிப்பெருக்கை, பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். இந்நாளில், வற்றா நதிகளை தங்கள் கடவுளாக கருதி, பூஜைகள் செய்து, பின் உழவு வேலையை துவங்குவர். பெண்கள், ஆற்றை வழிபட்டு, வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தின் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி முதல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை, இவ்விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.சென்னை நகரை பொறுத்தவரை, கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
ஆடிப்பெருக்குடன் சேர்ந்து ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையும் வந்ததால், அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல், பெண்கள் புற்றுகளில் பால் வார்த்தனர். பின், மாவிளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.மேலும், அம்மன் கோவில்கள் பொங்கலிட்டு, பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும் பல பக்தர்கள், அலகு குத்தி, பால் குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். சென்னையில் உள்ள பல்வேறு கோவில்களில், தீ மிதி திருவிழா நடத்தப்பட்டது.