தேனி கோயில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
தேனி : ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதி கோயில்களில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் நடை அதிகாலை 4:15 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிேஷகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் நெய்தீபமிட்டு வழிபாடு செய்தனர். தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் மீனாட்சியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயில் , என்.ஆர்.டி.,நகர் கணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் : பெரியகுளத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கம்பம் ரோடு காளியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. மாரியம்மன் கோயில், திரவுபதிஅம்மன், பள்ளத்து காளியம்மன், தண்டுப்பாளையம் காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
கூடலுார் : கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அம்மன் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுருளிமலை பழநிமலை பாதயாத்திரை குழு பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். சிறப்பு அபிஷேகம், ஆராதனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்களுக்கு வளையல், குங்குமம் வழங்கப்பட்டது.